'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் நவ.1-ல் பிரச்சாரம் தொடக்கம்: காணொலி மூலம் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறார். மாநிலம் முழுவதும் 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் காணொலி மூலம் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு மாவட்டங்களில் நடந்த முப்பெரும் விழாக்களில் காணொலி காட்சி மூலம் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக 'தமிழகம் மீட்போம்' என்றதலைப்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புபொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. வருவாய் மாவட்டங்களில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் அந்த வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட கட்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.

ஈரோட்டில் தொடக்கம்

முதல் கட்டமாக நவம்பர் 1-ம் தேதி ஈரோடு, 2-ம் தேதி புதுக்கோட்டையில் நடக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழா, 3-ம் தேதி விருதுநகர், 5-ம் தேதி தூத்துக்குடி, 7-ம் தேதி வேலூர், 8-ம் தேதி நீலகிரி, 9-ம் தேதி மதுரை, 10-ம் தேதி விழுப்புரத்தில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீவிர ஆயத்தப் பணி

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கடந்த பிப்ரவரியில் திமுக ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பல ஆயிரம் பேரை பணியில் அமர்த்தி தேர்தல் பணிகளை ஐ-பேக் மேற்கொண்டு வருகிறது.

திமுகவினர் மட்டுமல்லாது கட்சி சாராத இளைஞர்கள், இளம்பெண்கள், பேச்சு, எழுத்து, பிரச்சாரம், களப் பணி என்ற பல்வேறு துறைகளில் திறமை கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை திமுகவுக்காக ஐ-பேக் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ஸ்டாலின் ஆலோசனை

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் கடந்த ஒரு வாரமாக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன் அடுத்தகட்டமாக வரும் நவம்பர் 1-ல் தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்குகிறார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே 'நமக்கு நாமே' என்ற பெயரில் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார். ஆனால், தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பொதுக்கூட்டங்களில் காணொலி காட்சி மூலம் ஸ்டாலின் உரையாற்ற இருக்கிறார்.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்