மிலாது நபியை முன்னிட்டு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபிதிருநாளில் முஸ்லிம் சகோதர,சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாள் மத நல்லிணக்கத்தையும், பரிவையும் கொண்டுவரட்டும். சமுதாயத்தில் அன்பையும், அமைதியையும் வளர்க்க இந்த இனிய நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
முதல்வர் பழனிசாமி: ஏழை எளியோருக்கு உதவுதல், அனைவரிடத்தும் அன்புடன் பழகுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், உண்மையை பேசுதல் போன்றநபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தால், ஏற்றம் பெறலாம். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என வாழ்த்துகிறேன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மனிதநேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவதரித்த திருநாளை கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு எனது உளம்கனிந்த மிலாது நபி நல்வாழ்த்துகள். இந்நன்னாளில் நபிகள் அருளிய போதனைகளை கடைபிடித்து வாழ்வோம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
நபிகள் நாயகத்தின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அரியகருவூலங்கள். அவரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் முஸ்லிம் மக்களுக்கு மனமார்ந்த மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அனைத்து மக்கள் இடையேயும் அன்பையும் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை,எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று, நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: அனைவரும் சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று முழங்கிய நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதிகொள்வோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அன்புதான் உலகில் ஆகப்பெரிய சக்தி என்பதை போதித்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரிடமும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.
மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெரம்பலூர்எம்.பி. பாரிவேந்தர், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago