கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா தொடர்ந்த வழக்கில் கூறியிருந்ததாவது:

கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த சாருமதி 2019 மே மாதம் ஓய்வு பெற்றார். இப்பதவிக்கு தகுதி வாய்ந்த நபரை நியமிக்க தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் என் பெயர் 3-வதாகவும், பூர்ணசந்திரன் பெயர் 6-வதாகவும் இருந்தது. என் பெயருக்கு முன்பு உள்ள இருவரும் விரைவில் ஓய்வு பெற உள்ளதால், தமிழக அரசாணைப்படி என்னைத் தான் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமித்திருக்க வேண்டும்.

ஆனால், அப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள பூர்ணசந்திரனை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், ‘‘இதுபோன்ற முக்கிய பதவிக்கு தகுதியானவர்களை, திறமையானவர்களை தேர்வு செய்ய, அனுபவம் பெற்ற கல்வியாளர்கள் குழு அமைத்து தேர்வு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும். இதுபோன்ற பதவிகளுக்கு தேர்வு செய்யும்போது நீதிமன்ற தலையீடு வருவதை தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை பின்பற்றி, கல்லூரிக் கல்வி இயக்குநர் தேர்வு நடைமுறைகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்