என் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை; அரசியல் நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்பேன்: நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

By செய்திப்பிரிவு

தனது உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், அரசியல் நிலைப்பாடு பற்றி தகுந்த நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், தனிக் கட்சி தொடங்குவார் என்று கடந்த 1992 முதல் பேசப்பட்டு வருகிறது. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 1996-ல் நடந்த மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - தமாகா கூட்டணியை ரஜினி ஆதரித்தார். 2004 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதன்பிறகு எந்த கட்சிக்கும் வெளிப்படையாக அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினி, ‘‘தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’’ என்றுஅறிவித்தார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள்மன்றமாக அறிவித்து, நிர்வாகிகளையும் நியமித்தார். அதன்பிறகுஉடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியல் நகர்வுகளை நிறுத்தியிருந்தார். கடந்த மார்ச் 12-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘‘நான் முதல்வராக மாட்டேன். வேறுஒருவரை முதல்வராக முன்னிறுத்துவோம்’’ என்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று ரசிகர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

வலைதளத்தில் பரவும் கடிதம்

இதற்கிடையே, ரசிகர்களுக்கு ரஜினி எழுதியதாக ஒரு கடிதம்சமூக ஊடகங்களில் பரவியது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கட்சி பெயரை அறிவிக்க..

தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்துக்காக மக்களிடம் எழுச்சியை உண்டாக்க இந்தஆண்டு மார்ச் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கரோனாவால் யாரையும் சந்திக்கவும், ஆலோசனை நடத்தவும் முடியவில்லை. 2011-ல் எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். 2016 மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

இந்நிலையில் அரசியலில் நுழைவது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, ‘உங்களுக்கு வயது 70. சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை செய்தவர் என்பதால் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். கரோனா தடுப்பூசி வந்தாலும் அதை உங்கள் உடல் ஏற்குமா என்பது தெரியாது. எனவே, கரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறினர்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் கவலை. மக்களை நேரில் சந்திக்காமல் நான் எதிர்பார்க்கும் அரசியல்மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும். அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தால் அது எனது ஆதரவாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் வரும் ஜனவரி 15-க்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். என் அன்புக்குரிய ரசிகர்களும், மக்களும் என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தைதான் எழுதவில்லை என ரஜினி மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘என் அறிக்கை போல ஒரு கடிதம்சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பதுஅனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்து பேசி எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

கடிதத்தை தான் எழுதவில்லை என்று மறுத்துள்ள ரஜினி, அதில் தன் உடல்நலம் குறித்து வந்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்று கூறியிருக்கிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினியின் பெயரில் வெளியான கடிதமும், அதற்கு ரஜினியின் பதிலும் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்