கட்டாயக் கல்விச் சட்டப்படி இடஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திய தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எளையாம்பாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 316 தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகள் தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
ஆண்டு தோறும் தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகார ஆணைகள் பெற வேண்டும் என்பதை 2 ஆண்டுகளாக மாற்றி உள்ளோம். நீதிமன்ற வழக்கு காரணமாக பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் வழங்க முடியவில்லை.
கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை மாணவர்கள் சேர்க்கைக்காக, தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ரூ.375 கோடியை விரைவில் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்வித்துறையில் மத்திய அரசு எந்த மாற்றம் கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். இருப்பினும், புதிய பாடத்திட்டத்தை நாங்கள் தயாராக வைத்துள்ளோம். டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் கொண்டு வரப்படும் என்றார்.
விழாவில், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் கோபிதாஸ், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜா, வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் குணசேகரன் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago