கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோயில் நிலத்தை குறைந்த விலையில் கையகப்படுத்தி கட்டப்படுகிறதா?

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குறைந்த விலை நிர்ணயம் செய்து வாங்கப்பட்டுள்ளதாக பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரத்தில் 14.09 ஹெக்டேர் நிலப்பரப்பில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து தற்போது அங்கு கட்டிடம் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகளும், மண் மாதிரி சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயிலின் நில உரிமையை மீட்டெடுக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ரூ.88 கோடி மதிப்பீடு உள்ள நிலத்தை ரூ.1.98 கோடிக்கு அரசு கையகப்படுத்த முனைந்து வருகிறது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறையினரும் துணை போகின்றனர்” என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னனி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிதிலமடைந்து கிடக்கிறது. இதை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு அந்த இடத்தை அரசு கையகப்படுத்த முனைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.29.17 கோடி என இந்து சமய அறநிலையத் துறை நிர்ணயம் செய்துள்ளது. அந்த நிலத்தை அரசு ரூ.1.98 கோடிக்கு கையகப்படுத்த முனைந்துள்ளது. ஆனால் இன்றைய சந்தை மதிப்பின்படி அந்த நிலத்தின் மதிப்பு ரூ.88 கோடி ஆகும்.

ஆட்சியர் அலுவலகக் கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கு முன், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபனைக் கருத்துக்கள் தெரிவிக்க அக்டோபர் 29-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்த இந்து சமய அறநிலையத்துறை காலக்கெடு முடிவதற்கு முன்பே அங்கு அடிக்கல் நாட்ட அனுமதித்தது ஏன்?” என கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதியிடம் கேட்டபோது, “கோயில் நிலத்திற்கான மதிப்பீடு ரூ.80 கோடி என நிர்ணயித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியரோ, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் உட்புறம் இடம் அமைந்துள்ளதால், அந்த விலைக்கு ஏற்க முடியாது என ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து வருவாய் துறை பரிந்துரைப்படி கோயில் நிலம் ரூ.81 லட்சம் என நிர்ணயம் செய்து, 2.75 மடங்கு அதிகரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.1.98 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இடம் விற்பனை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை பரிசீலித்து வருகிறோம்” என்றார்.

வழிகாட்டுதல் குழு ஆய்வு

இதனிடையே வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் புனரமைப்பு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதல் குழுவினர் நேற்று முன்தினம் கோயிலை ஆய்வு செய்தனர். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை தொடர்ந்து கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினர்.

நிலம் கையகப்படுத்திய சர்ச்சை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆட்சியர் அலுவலகம் கட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தோம். ஆனால் அந்த அளவுக்கு போதுமான இடம் கிடைக்காத சூழலில் தான் கோயில் நிலத்தை தேர்வு செய்தோம். கோயிலுக்குச் சொந்தமான 14.09 ஹெக்டேர் நிலம், 2019-ம் ஆண்டு அன்றைய நில மதிப்பீட்டு வழிகாட்டுதல் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. அங்கு ஆட்சியர் அலுவலகம் வருகிறது என்ற தகவலுக்குப் பின்னரே அப்பகுதியில் நிலங்களின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.

கோயில் நிலத்தை குறைந்த விலையில் வாங்கி அபகரிப்புச் செய்தனர் என்று கூறுவது ஏற்புடையதல்ல. மக்களின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்வினையாற்றுவது வேடிக்கையாக உள்ளது. முதல்வர் அடிக்கல் நாட்டியதை குறிப்பிட்டு பேசுவதும் ஏற்கத்தக்கதல்ல. முதல்வர், அரசுக்கு சொந்தமான இடத்தில் தான் அடிக்கல் நாட்டினாரே தவிர, கைக்கு வராத கோயில் நிலத்தில் அல்ல என்பதையும் எதிர்வினையாற்றுவோர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் பிரபாகர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர். பெரும்பாலானோர் கோயில் நிலத்தை விற்பனை செய்யவும், ஆட்சியர் அலுவலகம் கட்டவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்