முல்லை பெரியாறு பராமரிப்புக்கு கேரள அரசு இடையூறு: ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தமிழக அரசுக்குதொடர்ந்து கேரள அரசு இடையூறு செய்து வருவதாக புகார்தெரிவித்து, துணை கண்காணிப்புக் குழுவின் ஆய்வுப் பணிகளை தமிழக அதிகாரிகள் புறக்கணித்தனர்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், அணையைக் கண்காணித்துப் பராமரிக்க உச்ச நீதிமன்றம் கண்காணிப்புக் குழு மற்றும் துணை கண்காணிப்புக் குழுவை நியமித்தது. அணையில் துணை கண்காணிப்புக் குழுஅவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்.

முல்லை பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழு தலைவராக மத்திய நீர்வளஆணைய செயற்பொறியாளர் சதீஷ் பொறுப்பு வகிக்கிறார். தமிழகப் பிரதிநிதிகளாக பெரியாறு அணை சிறப்பு கோட்டசெயற்பொறியாளர் ஜே.சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் த.குமார், கேரள பிரதிநிதிகளாக நீர்ப்பாசன செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு, உதவிப் பொறியாளராக கிரண் தாஸ் உள்ளனர். இந்தக் குழு அணையை ஆய்வு செய்ய நேற்று வந்தது. அவர்களை சந்தித்த தமிழகப் பிரதிநிதிகள், அணையைப் பராமரிப்பதில் கேரள அரசு இடையூறு செய்வதாகப் புகார் தெரிவித்தனர்.

அணையின் உபரிநீர் வழிந்தோடிகள், கேலரி உள்ளிட்ட பகுதிகளில் 13 முக்கியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான கட்டுமானப் பொருட்களை அணைக்குள் எடுத்துச் செல்ல கேரள நீர்வளத் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்த விவரங்கள் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் இரு மாநில அரசு செயலர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி தமிழகப் பிரதிநிதிகள், துணை கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் கேரள பிரதிநிதிகளிடம் விவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கேரள அதிகாரிகள், "உயரதிகாரிகள் ஒப்புதல் அளித்தால்தான் அனுமதிக்க முடியும். விரைவில் அனுமதி கிடைக்கும்" என்றனர். ஆனால், இதை ஏற்காததமிழகப் பிரதிநிதிகள், அணைஆய்வுப் பணியைப் புறக்கணித்தனர். இதையடுத்து, துணை கண்காணிப்புக் குழுவினர், ஆய்வு செய்யாமலேயே திரும்பினர். தமிழக அதிகாரிகளின் செயல்பாட்டை பெரியாறு வைகை பாசனவிவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்டவை வரவேற்றுள்ளன.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறும்போது, "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணையை பலப்படுத்த விடாமல்கேரள அதிகாரிகள் இடையூறு செய்கின்றனர். எனவே, சம்பிரதாயமாக நடைபெறும் அணை ஆய்வை தமிழகம் புறக்கணித்தது சரிதான். அணை பராமரிப்பில் கேரள அரசின் இடையூறு தொடர்ந்தால், கண்டித்துப் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்