கோவை/சென்னை: கோவை ஒண்டிப்புதூர் அருகேயுள்ள காமாட்சிபுரி ஆதீனம் சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள்(55) உடல்நலக்குறைவால் நேற்று முக்தியடைந்தார்.
சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகளிடம் தீட்சை பெற்ற சிவலிங்கேஸ்வர சுவாமிகள், 20 வயதில் துறவியானார். 30 ஆண்டுகளுக்கு முன் நொய்யல் ஆற்றங்கரையில் கண்டெடுத்த அங்காள பரமேஸ்வரி சிலையை பிரதிஷ்டை செய்து, காமாட்சிபுரத்தில் கோயிலை அமைத்தார். பின்னர், 51-வது சக்தி பீடமாக காமாட்சிபுரி ஆதீனத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்லடத்தில் நவக்கிரக கோட்டை என்ற சிவன் கோயிலைக் கட்டினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திறப்பு விழாவில், பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய ஆதீனங்களில் இவரும் ஒருவர். தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியுள்ள இவரது மடத்தில் ஆதரவற்ற மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
முக்தியடைந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடல், காமாட்சிபுரி ஆதீன வளாகத்தில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், சூலூர் அதிமுக எம்எல்ஏ கந்தசாமி, இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதிய ஆதீனமாக ஆனந்தபாரதி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழில் குடமுழுக்கு: அவரது மறைவுக்கு பல்வேறுதலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: ஆன்மிக வளர்ச்சி, சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்ட சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 1,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தியவர். தமிழைப் பரப்புவதை தனதுவாழ்நாள் பணியாக மேற்கொண்டார். அவரது மறைவு தமிழ் சமய நெறிக்கும், தமிழ் வழிபாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இறை பணியோடு, சமுதாயப் பணியும் மேற்கொண்ட சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு ஆன்மிகவாதிகளுக்கு பேரிழப்பு. இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago