தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டம்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதாக புகார் தெரிவித்து, யாழ்ப்பாணம் மாவட்ட கடல் பகுதிகளில் இலங்கை மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடியுடன் நேற்று போராட்டம் நடத்தினர்.

கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக விசைப்படகு மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் வருவதை தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை, பலாலி, வெற்றிலைக்கேணி, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று தங்கள் படகுகளில் கருப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு, நடுக்கடலில் போராட்டம் நடத்தினர்.

அப்போது, தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதை தடுக்க, இலங்கை ராணுவம் மற்றும் கடற்படை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக, இலங்கை மீனவர்களின் போராட்டத்தால், தமிழகப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட வாயப்புள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்துமீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்