நன்மை செய்வதாக பொய் வேடமிட்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோவை: நன்மை செய்வதாக பொய் வேடமிட்டு, சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநாடு, கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாகோவை கருமத்தம்பட்டியில் நேற்றுநடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசி, மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியைப்பிடித்தது. ஆனால், சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தியும், கட்டணங்களை அதிகரித்தும் மக்களை வாட்டிவதைக்கின்றனர்.

மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும் முடக்கியுள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய் வேடமிட்டு, முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.

கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்றுவர அதிமுக அரசில் நிதியுதவி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டரைஆண்டுகளில் ஒரு கிறிஸ்தவரையாவது ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு அனுப்பியுள்ளனரா?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மானியம் பெறும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் புதிதாக ஆசிரியர்கள், பணியாளர்களை அரசியல் குறுக்கீடு இன்றி நியமிக்க முடியவில்லை.

தனது குடும்பத்தினருக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக 1999 மக்களவைத் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்தது திமுக. மேலும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது, திமுகவினர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். அதிகாரத்தில் இருந்தவரை பாஜககொள்கைகள் திமுகவுக்கு தெரியாதா? பதவிக்காக திமுக தலைவர்கள் கொள்கையை காற்றில் பறக்கவிடுவார்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்புத் தலைவர் பேராயர் நோவா யுவணராஜ், பொதுச் செயலாளர் பேராயர் கே.மேஷாக் ராஜா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பிஆர்ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்