சென்னை: மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு முறையை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தேசிய ஒருங்கிணைந்த தேர்வு மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாக ‘நெக்ஸ்ட்’ என்ற ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ளது. இதற்கு எங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஏற்கெனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இதற்கு எதிர்ப்புதெரிவித்து கடிதம் எழுதியுள்ளோம்.
மருத்துவ இளநிலை மற்றும்முதுநிலை படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு மட்டுமின்றி ‘நெக்ஸ்ட்’ என எந்தவகை யான தேர்வையும் அதை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏற்கெனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வானது தமிழகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்விக்கான பாடத்திட்டமானது தேசிய மருத்துவக் கவுன்சிலின் விதிகள்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், பயிற்சி மற்றும் தேர்வு எனஅனைத்தும் மாநிலங்களின் மருத்துவ பல்கலைக்கழகங்களால் கண்காணிக்கப்படுகிறது. கடுமையான பயிற்சி, தேர்வு ஆகியவற்றை முடித்த பின்னர்தான், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்கப்படுகிறது.
இ்ந்நிலையில், பொது நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகள் மாணவர்களுக்கு மேலும் சுமையை உருவாக்கும். ஏற்கெனவே மாணவர்களுக்கு உள்ள படிப்பு தொடர்பான சுமைகளை கருத்தில் கொண்டு இதுபோன்ற தேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகளை கட்டாயப்படுத்துவது அவர்களின் மருத்துவம் சார்ந்த பயிற்சியில் தாக்கங்களை ஏற் படுத்தும்.
நுழைவுத் தேர்வுக்கு அதிகமாக பாடம் சார்ந்த கல்வியில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்படும். எனவே நெக்ஸ்ட் தேர்வு முறை தேவையற்றது. மருத்துவக் கல்வியில், மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்ள உரிமையை நீர்த்துப் போகச் செய்யும்வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எண்ணுகிறேன். எனவே, ஏற்கெனவே உள்ள தேர்வுமுறையே நீடிக்க வேண்டும். நெக்ஸ்ட் என்ற தேர்வைஅறிமுகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago