செக்கஸ்லோவாகியா இளைஞனும் சிவபெருமானும்! :

By செய்திப்பிரிவு

நான் பணியாற்றிய தமிழ் பல்கலைக்கழகத்துக்கு செக்கஸ்லோவாகியாவில் இருந்து ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான். நல்ல வெயில் நாள் அது. பால்வடியும் முகம். பொன்னிறச் சிகை. தக்காளியாகக் கன்றிய கன்னங்கள். துணைவேந்தரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை.

அவன் பெயர் யரசவாவ் பொர்மானெக். அவனுக்கு விடுதி வாழ்க்கை வேண்டாமாம். ஏதாவது ஒரு தமிழ்க் குடும்பத்துடன் வாடகை விருந்தாளியாகத் தங்கிக் கொள்கிறானாம் என்றார் துணை வேந்தர். அலைச்சல்தான் மிச்சம். அவனை ஏற்றுக்கொள்ளும் தமிழ்க் குடும்பங்கள் ஏதும் தஞ்சாவூரில் இல்லை. அவனை என் வீட்டிலே தங்க வைத்துக்கொள்ள ஏற்பாடாயிற்று.

பொர்மானேக்கின் அறை புத்தகங் களாலும், இசைக் கருவிகளாலும் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவன் அறைக்குள் போய்விடுவான். உள்ளே இருந்து கேட்கும் ஸ்டீரியோ ரிக்கார்ட் பிளேயரின் சத்தத்தில் வீடே அதிரும். எங்களுக்குப் பழகிவிட்டது. எப்போது அவன் அறைக்குள் போனாலும் நாலாபுறமும் புத்தகங்கள் இறைந்து கிடக்கும். நடுவே அவன் உட்கார்ந்திருப்பான்.

அவனுக்குத் திடீரென்று சிவபக்தி வந்துவிட்டது. நெற்றியில் விபூதி பூசிக்கொள்ள ஆரம்பித்தான். பெரிய கோவில் கருவூரார் சன்னதியில் கற்சிலைபோல் யோக முத்திரையுடன் உட்கார்ந்திருந்தான்.

சிவ வழிபாடு பற்றிய அவனது ஆரம்பகால சந்தேகங்களை என்னால் எளிதாகத் தீர்த்து வைக்க முடிந்தது. ஆனால் மிகவும் கடினமான வேதாந்த சூத்திரங்களை என்னால் விளக்க முடியவில்லை.

“உங்கள் கடவுள்களில் எனக்குப் பிடித்தவர் சிவபெருமான்தான்! ஆதிசிவன்!” என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டான்.

“ஏன் அப்படி?”

“அவர்தான் ‘டான்ஸ்’ ஆடுகிறார்! அதுவும் எப்பேர்ப்பட்ட டான்ஸ்? சிவதாண்டவம்!

“உங்கள் பிரச்சினைகளுக்கெல் லாம் காரணம் நீங்கள் நடனம் ஆடாததுதான்!”

“பரத நாட்டியம் இருக்கிறதே! வடக்கே கதாதரர் நடனம் மூலம் சமாதியில் மூழ்குவார்!”

“நான் பொதுவாகச் சொல்கிறேன்!நீ நடனம் ஆடி நான் பார்த்ததே இல்லை! கடவுள் நாட்டியம் ஆடினால் கைகூப்பி வணங்குகிறீர்கள்! நீங்கள் ஆடுவதே இல்லை! என்ன முரண்பாடு இது? எங்கள் ஊரில் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடனம் ஆடுவோம்! ஆடத் தெரியாதவனை நான் இறைவன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நீட்சே சொல்லியிருக்கிறார்”

ஒருகட்டத்தில் அவனுடைய பேச்சு சிவபெருமானின் சிவதாண்டவத்தைச் சுற்றிச் சுழன்றது. அவனுடைய தேடல் பிரமிக்கவைத்தது.

சிவதாண்டவம் என்பது பிரபஞ்ச இயக்கத்தையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் நுட்பமாக விவரிப்பது என்று சொல்லி மான், மழு, பிறை, புலித்தோல், உடுக்கை இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன என்று தகவல் களைக் கொட்டிக் குவித்தான். ஒருநாள் தானாகவே சிதம்பரம் சென்று திரும்பினான்.

ஆனந்த தாண்டவம் மட்டுமன்றி சிவபெருமான் ஆடிய 108 நடனங்களையும் ஆடிப்பார்க்க ஆசைப்படு வதாகவும் சொன்னான்.

ஒருவாரம் கழிந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

“கோபால்!” என்று உற்சாகமாக கூவியபடியே உள்ளே நுழைந்தான் பொர்மானேக். நேராக நான் சாப்பிடும் இடத்துக்கே வந்துவிட்டான். என் மனைவி முகம் சுளித்தார். “கோபால்! இதோ பார்!” தன் கைப்பையில் இருந்து எதையோ வெளியே எடுத்தான்.

உடுக்கை! நிஜமான உடுக்கை!

“சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வா!”

நான் பொர்மானெக் அறைக்குள் நுழைந்தேன். இடுப்பில் புலித்தோல் மாதிரி வண்ணம் தீட்டிய துண்டு. காலில் சலங்கை கையில் உடுக்கை. ரெக்கார்ட் பிளேயரில் இருந்து பீத்தோவனின் இசை பீறிடுகிறது.

“கோபால்! கவனி! பீத்தோவனின் இசையோடு உடுக்கை ஓசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும் பார்! மயான பூமியாக இருந்தால் நன்றாக இருக்கும்! பரவாயில்லை இதை மயான பூமியாக நினைத்துக்கொள்! நடப்பதைப் பார்!

உடுக்கை ஒலித்தது. அதிலிருந்து எழுந்த ரீங்காரக் கிலுகிலுப்பு என்னை எங்கோ உந்திச் சென்றது. ஆயிரம் வயலின்கள் பீறிட்டன. கால் சலங்கை ஒலிக்க பொர்மானெக் ஆடலானான். மெல்ல மெல்ல இசையின் ஸ்தாயி உயர உயர அவன் ஆட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே போயிற்று.

பொன்னிறச் சிகை சுழன்றது. சாம்பிராணி புகை மண்டலத்தின் ஊடாக விரிந்தெழுந்த கைகளின் வரிசை புலப்பட்டது. ஒன்றில் மானும், மழுவும், பிறையும், கங்கையும் கபால மாலையும் ஆட்டத்தினூடே தோன்றி மறைந்தன.

சலங்கை ஒலியின் ஓசை பீத்தோவ னின் வீறிடல்களோடு சங்கமித்தது.

“வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்

வெளியிலிரத்தக் களியொடு பூதம்பாட…”

என்ற பாரதியின் ஊழிக்கூத்தை வர்ணிக்கும் பாடல் உயிர்பெற்றது.

சிதம்பரமானால் என்ன… செக்கஸ் லோவாகியா ஆனால் என்ன…

புலித்தோலை அரைக்கசைத்து ஆடும் அந்த செக் இளைஞனை கைகூப்பி வணங்கினேன்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்