நின்று பெய்த 100 மி.மீ மழை :

By மானா பாஸ்கரன்

எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியிருந்த நேரம் அது. தமிழ்நாட்டின் சந்துபொந்துகளில் எல்லாம் எம்.ஜி.ஆர். நலம்பெற வேண்டியது ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ என்கிற பாடல் ஒலித்தது. ‘இதயக்கனி’ படம் வெளியானபோது பெற்ற புகழைவிட பின்னாளில் பெரும்புகழை சேமித்த இந்தப் பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். கோவை மாவட்டம் சூலூருக்கு அருகில் உள்ள பள்ளப்பாளையத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக ‘நான் யார்.. நான் யார்.. நீ யார்..?’ என்கிற பாடலை முதன்முதலாக எழுதியதன் மூலம் வெள்ளித்திரையில் வீதியுலா வரத் தொடங்கினார்.

கோடம்பாக்க வீதியில், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், நா.காமராசன் என பெரும் படைப்பாளிகள் திரையிசைப் பாடல்களில் தனித்தனி சாரட் வண்டிகளை ஓட்டிக்கொண்டிருந்த காலம். அப்போது புலவர் புலமைப்பித்தன் தனித்ததொரு பாதையில் தனது பாட்டுப்பயணத்தை தொடங்கியவர். அவருக்குள் தமிழ் இலக்கியத்தின் மீதும், மொழியின் மீதும் இருந்த அடர்த்தியான பற்று, அவரது கற்பனை வயலுக்கு கூடுதல் பச்சையம் சேர்த்தது.

அவரது பாடல்கள் புலவர் மரபின் நீட்சியாக விளங்கிய அதே வேளையில், புதிய கற்பனைகளைச் சுமந்து பறந்தன. இப்படியும் பாடல் எழுத முடியும் என்று தனது பளிங்குத் தமிழை பாடல் முழுதும் தூவியவர். சில பாடல்களில் அவருடைய சொற்கள் திராட்சை ரசம் அருந்தியிருக்கும். சில பாடல்களில் அவர் எடுத்தாளும் சொற்கள் சொர்க்கத்தின் சாவிகளாகும். எல்லா பாடல்களிலும் அவரது சொற்கள் பகலின் வெளிச்சத் துகள்களை உதிர்க்கும்.

எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மக்கள் மன்றத்தில் கல்வெட்டை பதித்திருந்த நிலையில், புலமைப்பித்தன் பாட்டுத் தமிழ் அதற்கு ஊட்டம் தந்தது. அந்த இருவர் அடங்கிய குளிர்க் கூட்டணி ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை நட்பின் வெப்பத்தை தன் உள்ளங்கைக்குள் பத்திரமாகப் பொத்தி வைத்திருந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது பாடல்கள், அத்தனையும் வெற்றிக்கோட்டை தொட்டவை. ‘சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே..’, ‘ஓடி ஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்..’, ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு.. பொங்கி வரும் கங்கை உண்டு..’ என்கிற பாடல் வரிகளில் புலமைப்பித்தனின் சமூக அக்கறை ஊஞ்சல் கட்டும். ‘இனியவளே என்று பாடி வந்தேன்..’ என்று காதலியை அவர் தன் வரிகளால் வருடும்போது, அந்த வருடல் நம் உள்ளத்தையும் தேயிலை மலைச் சாரலாக உரசிச் செல்லும்.

‘நாயகன்’ படத்தில் ‘நீயொரு காதல் சங்கீதம்..வாய்மொழி சொன்னால் தெய்வீகம்..’, ‘நீதியின் மறுபக்கம்’ படத்தில் ‘மாலை கருக்கலில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ..’, ‘மெல்லப்பேசுங்கள்’ படத்தில் ‘செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு.. வெண்பஞ்சு மேகமே கோலம் போடு..’, ‘தங்கமகன்’ படத்தில் ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’, ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்’, ‘கோயில் புறா’ படத்தில் ‘வேதம் நீ.. இனிய நாதம் நீ..’, ‘அழகன்’ படத்தில் ‘ஜாதி மல்லி பூச்சரமே.. சங்கத்தமிழ் பாச்சரமே’ போன்ற பாடல்களில் அவர் உள்புகுத்தியிருப்பது தமிழின் அணி இலக்கணம் என்பது பலருக்குத் தெரியாதது.

இலக்கணப் புலமையும் இலக்கியப் புலமையும் புலமைப்பித்தனின் உள்பாக் கெட்டில் பத்திரமாய் இருந்தன. அவற்றின் விளைவுதான் இந்த இனிக்கும் பாடல்கள். ‘நாயகன்’ படத்தில் பழைய பாடலைப் போன்ற பிரதிமையூட்டும் ஒரு பாடல் காட்சியை மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். நாயகன் கமல்ஹாசனை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டுச்செல்ல அவனது நண்பன் ஜனகராஜ் ஒரு மழை மறைவுப் பிரதேசத்துக்கு அழைத்து செல்வார். அப்போது காலத்தின் வாசனையுடன் ராஜாவின் இசையில் பாடல் ஒலிக்கும். அந்தப் பாடலில் ‘நீ சிரித்தால் தீபாவளி.. நாளும் இங்கே ஏகாதசி..’ என்று மென் தமிழில் புலமைப்பித்தனின் வரிகள் பித்தேற்றும்.

‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு’ பாடலின் தொடக்கத்தில் மெல்ல அவிழும் தொகையறாவில் ‘கூவின பூங்குயில் கூவின கோழி/குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்/யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் /எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ’ என்று தன்னால் மட்டும்தான் திரைமெட்டுக்கு இப்படிச் சாமுத்திரிக்கா பட்டு போன்ற மென்மையுடன் சொற்கள் எடுத்து திரையிசையில் நெசவு செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார் புலமைப்பித்தன்.

‘ஈரமான ரோஜாவே’ படத்தில் இளைய ராஜாவின் இசையில் மனோ ஒரு பாடல் பாடியிருப்பார். அப்பாடலில் புலமைப்பித்தனின் தமிழ் உயிர் ஊற்றியிருக்கும். ‘அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே...

இதோ காதல் ஊர்வலம்.. இதோ காமன் உற்சவம் இங்கே..’ எங்கே என்கிற பல்லவியோடு நம் காற்றில் ‘அப்லோடு’ ஆகும் பாடல், இரண்டாவது சரணத்தில்

‘உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு/ நடக்கும்போது துடித்தது எனது நெஞ்சு/ இரண்டு வாழைத் தண்டிலே ராஜகோபுரம்/ நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்/ தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே/ ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா’ என்று கல்யாண பந்தி வைத்திருப்பார்.

தமிழ் ரசிகர்களின் மனவானம் ஓரளவும் மேக மூட்டத்துடம் காணப்படும் பொழுதுகளில்.. லேசானது முதல் மிதமான மழை வரை திரைப்பாடல் மூலம் பெய்வித்தவர் புலைமைபித்தன். அவருடைய பெரும்பாலான பாடல்கள், நின்று பெய்த பெருமழைக்குப் பிறகான குளிர்ச்சியின் உணர்வை ஊட்டக் கூடியவை.

மனம் விட்டு பேசும்பொழுதுகளில் ‘எனக்கு வியாபாரப் புத்தியும் இல்லை. விளம்பர உத்தியும் தெரியவில்லை’ என்று சொல்லும் புலவர், தன்னை எந்த இடத்திலும் முன்னெழுதிக் கொண்டவரில்லை. ஆனால் அவரது தமிழ் எப்போதும் அவர் பெயரை திரை இசை மொழி வரலாற்றுப் பக்கங்களில் முன்னெழுதிச் செல்லும்.

தொடர்புக்கு: baskaran.m@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்