ஊட்டி சுடும்! :

By எஸ்.எஸ்.லெனின்

மயில்சாமி தனது தம்பி ஆறுவுடன் சேர்ந்து கோவையின் புறநகரில் கஞ்சா சில்லறை விற்பனையில் ஈடுபடுகிறான். இவர்களிடம் பொட்டலம் மடிக்கும் உதவியாளனாக இருப்பவன் பொன்னன். அன்றைய தினம் போதை தடுப்பு போலீஸார் சோதனை காரணமாக ஆபத்து நெருங்குவதை உணர்கிறான் மயில்சாமி. தன்னிடமிருக்கும் ரூபாய்10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருளை, உடனடியாக கைமாற்றி விட தீர்மானிக்கிறான். சரக்கை வாங்க ஊட்டியில் ஒருவர் தயார் என்கிற தகவல் கிடைக்கிறது.

துரத்தும் போலீஸ், உடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆபத்து ஆகியவற்றுடன் மயில்சாமி குழுவின் ஊட்டி பயணம் தொடங்குகிறது. ஒற்றை இரவில் தொடங்கி முடியும் கதை. ஒன்றரை மணி நேரத் திரைப்படம் தொடங்கியதிலிருந்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாய் செல்கிறது. படத்தில் பங்கேற்றவர்கள் அனைவருமே புது முகங்கள். அதற்கான சாயல் துளியுமின்றி அவர்கள் உலவுகிறார்கள். சிறிய வீடு, ஓடும் கார் என்று இரண்டு தளங்களில் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. ஆனாலும் பெரிதாக தொய்வு காட்டாமல் விரைகிறது திரைக்கதை.

சோனிலிவ்வில் வெளியாகியுள்ள திரைப்படத்தின் தலைப்பில் வரும் ஆல்ஃபா அடிமையாக பொன்னன் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் ஈஸ்வர். அசிரத்தையான காட்சி ஒன்றின் சட்டக மூலையிலிருந்து எட்டிப்பார்க்கும் சாதா கதாபாத்திரம், மெல்ல வளர்ந்து அடுத்தடுத்த காட்சிகளில் திரையை முழுக்க ஆக்கிரமிப்பது படத்தின் சுவாரசியங்களில் முக்கியமானது. கஞ்சா வியாபாரியால் ஏச்சுக்கும் கை நீட்டலுக்கும் ஆளாகும் அந்த இளைஞன், தன்னுடைய அபாரமான ஆகிருதியில் அதற்கான வளர்ச்சியை அடைவதை நம்பும்படித் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அதேபோல கஞ்சா வியாபாரியாக உதார் விடும் மயில்சாமி கதாபாத்திரத்தில் தோன்றும் கல்கியின் உடல்மொழி அபாரம். திரைப்படத்தின் இயக்குநர் ஜினோவி, அண்ணன் மயில்சாமியிடம் சதா திட்டுக்கள் வாங்கும் தம்பி ஆறுவாக வருகிறார். தனது நடை ஒன்றின் மூலமாகவே அந்த கதாபாத்திரத்தின் தொனியை ஜினோவி சொல்லிவிடுகிறார்.

பொட்டல வியாபாரிகளான இந்த மூவரும், தங்கள் வாடிக்கையாளரான இரண்டு இளைஞர்களை மடக்கி ஊட்டிப் பயணத்துக்கு கைப்பிடியாக வைத்துக்கொள்கிறார்கள். அதன் பின்னர் இவர்களின் திரை இருப்பு பார்வையாளர்களைப் கட்டிப்போடுகிறது. சிறிய படம் என்றபோதும் பெரிதாய் குறை சொல்லமுடியாத தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு படத்தை தாங்கி நிற்கிறது. விரையும் காருக்குள் அதிரும் ஒலியைக்கூட நுட்பமாக சேர்த்திருக்கிறார்கள். எதிர்பார்ப்புகளை தூண்டும் பின்னணி இசையும் ஆல்ஃபா அடிமையின் ஈர்ப்புகளில் ஒன்றாகிறது. உதட்டசைவில் சரியாக உட்காராத வசனங்கள் சில இடங்களில் இடறினாலும் ஒட்டுமொத்தமாகச் சிறப்பான திரைப்படத்தை தந்திருக்கிறார்கள். நகைச்சுவையின் பெயரால் தன்பாலீர்ப்பாளர்களை கேலி செய்யும் வசனங்கள் உறுத்தல்.

கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில் படத்தின் உள்ளடக்கத்தையும் பார்வையாளர்களின் ரசனையையும் நம்பி வெளியாகியிருக்கும் ‘ஆல்ஃபா அடிமை’ போன்ற தரமான படங்களை ஆதரிப்பது ரசிகர்களின் கடமை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்