டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் 26 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர். ஆடவர் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் களமிறங்குகிறார்கள்.
ஆரோக்கிய ராஜீவ்
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஆரோக்கிய ராஜீவ், தமிழ்நாட்டில் திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர். 30 வயதான ஆரோக்கிய ராஜீவ், நீளம் தாண்டுதல் மூலம்தான் தன்னுடைய தடகள ஆட்டத்தைத் தொடங்கினார். பின்னர், ஓட்டம், தொடரோட்டப் பிரிவுக்கு மாறினார். 2013ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேசத் தொடர்களில் ஆரோக்கிய ராஜீவ் பங்கேற்று வருகிறார். 2014 இஞ்ஜியோன் ஆசிய விளையாட்டில் வெண்கலம், 2016 ஷில்லாங் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கம், 2017 புவனேஸ்வரம் ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி ஆகிய பதக்கங்களை வென்றவர். 2018 ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றதன்மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார். தடகளத்தில் தொடர்ந்து தடம் பதித்த ஆரோக்கிய ராஜீவ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது பெரிய வியப்பில்லை.
நாகநாதன் பாண்டி
இன்னொரு வீரரான, நாகநாதன் பாண்டி தமிழ்நாடு காவல்துறை ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர். தமிழ்நாடு காவல் துறையிலிருந்து 40 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் முதல் வீரர். சென்னையில் பணிபுரிந்தாலும், இவருடைய பூர்விகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. வானம் பார்த்த வறண்ட பூமியில் வறுமைக்கு மத்தியில் வாழ்க்கையைத் தொடங்கியவர். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தடகள விளையாட்டில் இவர் காலடி எடுத்து வைத்தபோது, ஷூ வாங்கக்கூட வசதியில்லை. காய்ந்த வரப்புகளிலும் பிளந்து கிடந்த நிலங்களிலும் ஓடியே பயிற்சி மேற்கொண்டவர். வறுமைக்கு மத்தியில் படிப்பை முடித்த நாகநாதன், விளையாட்டு ஒதுக்கீட்டில் காவல் துறையில் சேர்ந்தார். காவலர் ஆனபிறகும் தடகள விளையாட்டை விடாமல் தொடர்ந்த நாகநாதன், 2019இல் அகில இந்திய காவல்துறை விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கம் வென்று புகழ் வெளிச்சம் பெற்றார். தொடர்ந்து தடகளத்தில் முத்திரை பதித்த நாகநாதன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வாகியிருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கில் 4*400 தொடர் ஓட்டப் போட்டியில் அமல் ஜேக்கப், முகம்மது அன்ஸ், நோஹ் நிர்மல் டோம் ஆகியோருடன் சேர்ந்து ஆரோக்கிய ராஜீவும், நாகநாதன் பாண்டியும் பங்கேற்கிறார்கள். கூட்டு உழைப்பை வெளிப்படுத்தும் தொடரோட்டத்தில் ஐவரும் சேர்ந்து திறமையை வெளிப்படுத்தினால், ஆரோக்கிய ராஜீவும் நாகநாதனும் தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வாய்ப்பு உண்டு.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago