கரும்பலகையில் ஆசிரியர் எழுதிக் காட்டுவதை, குழந்தைகள் எழுதிப் பார்த்து கற்றுக்கொள்வார்கள். பொதுவாக வகுப்பறைவழியாக குழந்தைகளுக்கு மொழி இப்படித்தான் அறிமுகமாகிறது. இதற்கு மாறாகக் கதைகளின் வழியாகவும், பாடல்களின் வழியாகவும்கூட மொழியை குழந்தைகளிடம் விரைவாகவும் துல்லியமாகவும் சேர்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது ‘கரடி பாத்’.
கல்வி சார்ந்த ஒலிப்பேழைகளையும் ஒலிப் புத்தகங்களையும் வெளியிடும் நிறுவனம் இது. அண்மையில் லண்டனில் நடைபெற்ற 50-வது புத்தகக் காட்சியில் கல்வி சார்ந்த கலைப் படைப்புகளை உருவாக்கியதற்காக இந்த நிறுவனத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
கதை, இசை, உடல் மொழி, நாடகம் போன்றவற்றின் மூலமாகக் குழந்தைகளுக்கு இயல்பாக மொழியை அறிமுகப்படுத்துவதே எங்களின் லட்சியம் என்கிறார் கரடி பாத்தின் நிறுவனர்களில் ஒருவரான விஸ்வநாத்.
பத்தாண்டுகளுக்கு முன்பாகக் கரடி கதைகள் என்னும் தலைப்பில் ஆங்கில எழுத்துக்களை, வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் ஒலிக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. காட்டுயிர் கதாபாத்திரங்களின் வாயிலாகக் கதை சொல்லும் உத்தியுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஒலிப்பேழைகளுக்குப் பிரபல நடிகர்கள் நசீருத்தின் ஷா, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர்.
அந்தக் கதைகளை குழந்தைகள் ஈடுபாட்டுடன் கேட்க ஆரம்பித்தனர். அந்தக் கதைகளின் மூலமாகவே புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொண்டனர். இந்த முயற்சி மொழியின் மீதான குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்க உதவியது. `கரடி பாத்’ என்னும் இந்நிறுவனத்தின் செயலிவழியாக மகாராஷ்டிரத்தின் தாராவி குடிசைப் பகுதியில் இருக்கும் குழந்தைகள், தமிழ்நாட்டு கிராமக் குழந்தைகளும் பயனடைந்திருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago