தமிழகத் தேர்தல் முடிவு வெளியானதையொட்டிச் சில மீம்கள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கவிருப்பதைச் சிறுமைப்படுத்தும் விதத்தில், ‘போன மாசம்வரை வீட்டில் வெட்டியா இருந்தவளுக்கு அடுத்த மாதத்தில் இருந்து 1,000 ரூபாய் அக்கவுன்ட்டுக்கு வரப்போகுது’ என்றும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் திட்டத்தை எள்ளி நகையாடும்விதமாகப் பேருந்தில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்து, ‘ஏம்மா, காலையில ஆறு மணிக்கு ஏறுன. இப்ப நைட் பத்து மணி ஆகுது. நாங்க பஸ்ஸ டிப்போல விடணும். என்னதான் இலவசமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?’ என்று நடத்துநர் கேட்பதாகவும் சித்தரிக்கப்பட்டுப் பரப்பப்பட்டவை அருவருப்பின் உச்சம்.
இது போன்றவை அடிப்படை சமூகப் புரிதல் சிறிதுமின்றி உருவாக்கப் பட்டவை மட்டுமல்ல; பெண் என்பவள் எவ்வித அதி காரமும் இன்றி வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியவள்தான் என்கிற ஆணாதிக்க, பிற்போக்குத் தனத்தில் இருந்து உருவானவை.
விடுதலைப் பயணம்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில், சாதாரணக் கட்டணப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என்பது முக்கியமானது. பயணம் என்பது பெண்களின் உலகை விரிவுபடுத்தவல்லது. வீட்டைத் தாண்டியும் வேறொரு உலகம் இருக்கிறது என்பதைக்கூட உணராத நிலையில்தான், இங்கே பல பெண்கள் இருக்கிறார்கள். படிக்கவும் வேலைக்குச் செல்லவுமாவது பெண்களுக்கு ஓரளவுக்குப் பயணங்கள் அமைந்துவிடுகின்றன. அவை ஆசுவாசமானவையா என்பது தனிக்கதை. ஆனால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ உறவுகளையும் நண்பர்களையும் சந்திக்கவோ விருப்பத்தின்பேரில் தனிப்பயணம் செய்யவோ பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கையில் பணமின்றித் தவிக்கும் பெண்களுக்குப் பக்கத்துக்குக் கிராமத்தில் இருக்கும் பிறந்த வீட்டுக்குப் போவதென்பதுகூடப் பெரும்பாடுதான். இப்படிப்பட்ட நிலையில் இருக்கிற பெண்களுக்கு முதல்வரின் இந்த அறிவிப்பு நிச்சயம் ஆசுவாசமாகத்தான் இருக்கும். இதைக்கூட ஏதோ செய்யக்கூடாததைப் பெண்கள் செய்யத் துணிவதுபோல் விமர்சிப்பவர்கள் நடுவேதான் பெண் விடுதலை குறித்துப் பேச வேண்டியிருக்கிறது.
இது பெண்களின் உரிமை
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப் படும் என்று தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இப்போதே சிலர் எதிர்மறையாகப் பேசுவது அநாகரிகத்தின் வெளிப்பாடு. இந்த அறிவிப்பைக் கேலி செய்கிற யாரும் ‘உரிமைத்தொகை’ என்கிற சொல்லாடலைப் புரிந்துகொண்டார்களா எனத் தெரியவில்லை. அந்தப் பணத்தைப் பெறுவது பெண்களின் உரிமை. தவிர, பெண்களின் உடலுழைப்புக்கு ஊதியம் இல்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு காலந்தோறும் புறக்கணிக்கப்பட்டுவருகிறது. அந்தச் சிந்தனையை மாற்றி, பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் தரும் தொகையாக இதைப் பார்க்க வேண்டும். மாறாக, சும்மா இருக்கிறவர்களுக்குக் காசு கிடைக்கிறது என்பது போன்ற வாதத்தைவிட அபத்தம் வேறில்லை.
இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவது அவசியம். அது திட்டமாக அறிவிக்கப்படும்போது எவ்வித வரையறையும் இன்றி குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் பணப்பயன் கிடைக்கும்படி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரட்டைச் சுமை என்பதால் அவர்களுக்கும் இந்தப் பணப்பயன் வழங்கப்பட வேண்டும்.
மறுக்கப்படும் அதிகாரம்
தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்கிறபோதும், அதிகாரத்தில் அமரும் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு. 1991-ம் ஆண்டுக்கு முன்புவரை தமிழகச் சட்டப்பேரவையில் பெண்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும் கீழேதான் இருந்தது. அதன் பிறகும் அற்புதங்கள் நிகழ்ந்துவிடவில்லை. 1991-ம் ஆண்டு 32 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உயர்ந்து மீண்டும் சரிந்தது. 2016 தேர்தலில் 21 பெண்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்க, இந்த முறை 12 பெண்கள் மட்டுமே பெண்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். 34 பேர் கொண்ட அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். சமூக நலம், சிறுபான்மையினர் நலம் போன்ற துறைகளே பெரும்பாலும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான திட்டங்களில் பெண்களின் பங்களிப்பும் பார்வையும் அவசியம் என்பதால் சமூக நலத்துறையைப் பெண்களுக்கு வழங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது தவிர நிதி நிர்வாகம், கல்வி, நகராட்சி நிர்வாகம், வருவாய் போன்ற துறைகளையும் பெண்களுக்கு வழங்குவது அவர்களது நிர்வாகத் திறனுக்கான அங்கீகாரமாக இருக்கும்.
இந்த முறை அமைச்சுத் துறைகளின் பெயர்களில் சில மாற்றங்களைப் புதிய அரசு செய்திருக்கிறது. சமூக நலத் துறை, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் அளவிலான மாற்றமாக இல்லாமல் செயல் அளவிலான மாற்றமும் இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான ஒடுக்குதலும் வன்முறையும் அனைத்துத் தளங்களிலும் வலுப்பெற்றுவரும் சூழலில் மகளிர் உரிமைத் துறையின் உருவாக்கம் வரவேற்கத்தக்கதே.
பெண்களுக்கான ஆட்சி
பெண்களை முன்னேற்றும் திட்டங்கள் ஒவ்வொரு ஆட்சியின்போதும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால், அவை எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டன என்பதைப் பொறுத்துத்தான் அது மக்களுக்கான ஆட்சியா இல்லையா என்பது விளங்கும். பெண்களின் நிலையை, சமூக இருப்பை, பொருளாதாரத்தை மாற்றும் திட்டங்களில் பெரும்பாலானவை திமுக ஆட்சியின்போது உருவாக்கப்பட்டவை. திருமண உதவித் திட்டத்தின் மூலம் பெண்களின் குறைந்தபட்ச கல்வியை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’, கணவனை இழப்பதுடன் பெண்ணுக்கு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்த்திய ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம்’, கணவனை இழந்த நிலையில் பொருளாதார வசதியும் இன்றித் தவிக்கும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட ‘ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை திட்டம்’ போன்றவை பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த உருவாக்கப்பட்டன. இவை தவிர மகப்பேறு உதவித்தொகை, கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு ‘சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்’, பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆதரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் ‘அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்’, மகளிர் சுயஉதவிக் குழு, சொத்தில் சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன.
பாதுகாப்பை உறுதிசெய்வோம்
இந்தத் திட்டங்களை அடியொற்றியும் இவற்றை மேம்படுத்தியும் பல்வேறு திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும், பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களைக் களைய இணையவழிக் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் ஆகிய இரு திட்டங்களும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் இச்சூழலில் முக்கியமானவை. இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் இந்நாளில் பெண்க ளின் பொதுவெளிச் செயல்பாட்டை முடக்கும் நோக்கில் நடைபெறும் இணைய வழித் தாக்குதல்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்தக் காவல் நிலையங்களின் செயல்பாடு அமைவது அவசியம். அதேபோல் பெண்களின் பணியிடப் பாதுகாப்பையும் அரசு உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாணவியரின் பள்ளி இடைநிற்ற லுக்குக் குழந்தைத் திருமணமும் மாதவிடாயும் முக்கியக் காரணங்கள். போதுமான கழிவறைகளும் தண்ணீரும் இல்லாத பள்ளிக் கட்டமைப்பு, மாதவிடாய் நாட்களில் மாணவியருக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்; அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளிலும் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் நாப்கின்களை அகற்றுவதற்கான ஏற்பாட்டையும் செய்துதர வேண்டும். கரோனா பெருந்தொற்று முடிந்து பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படத் தொடங்குவதற்குள் இவற்றுக்கான திட்டங்களையும் பணிகளையும் அரசு மேற்கொண்டால், பெண்க ளின் அறிவுப் பயணத்துக்குத் தடை இருக்காது.
செயல்பாடும் அவசியம்
பெண்களின் நிலையை உயர்த்துவதில் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு முக்கியப் பங்குண்டு. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒரு லட்சம் கிராமப்புறப் பெண்களுக்குச் சிறுதொழில் கடன் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு அதன் நோக்கத்தை நிறைவுசெய்தால் அந்தப் பெண்கள் பொருளாதாரத் தன்னிறவு பெறுவார்கள். ஒருவொரு திட்டமும் எந்த அளவுக்குப் பயனாளிகளை எளிதாகச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் வெற்றி அமையும். அந்த வகையில் தகுதியான அனைவருக்கும் எவ்விதச் சிரமமும் இல்லாமல் அனைத்துத் திட்டங்களும் சென்றடைவதை அரசும் அதிகாரிகளும் உறுதிபடுத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தும் வாக்கு பெறும் நோக்கத்தில் மட்டுமல்லாமல், பெண்களின் நிலையை உயர்த்துவதற்காகவும் சொல்லப்பட்டவைதாம் என்பதை இந்தத் திட்டங்களின் செயலாக்கமே உணர்த்தும். அதை உணர்த்த வேண்டும் முதல்வர்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago