ஆணின் சோகத்தை ஆற்றுப்படுத்த வந்த சாமிகள் :

By ச.தமிழ்ச்செல்வன்

பூ கட்டும் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவி 40 வயதில் இறந்துவிட்டார். குழந்தைகளும் இல்லை. பூக்களும் அதை வாங்க வரும் மனிதர்களுமே உலகம் என்று வாழ்ந்துவந்தார். ஒருநாள் 13-14 வயதுள்ள பெண் குழந்தை வந்து அவரிடம் பூ கேட்கிறாள். இன்னும் வியாபாரமே ஆகவில்லை, கடையைத் திறந்தவுடன் முதன் முதலாக வந்து இலவசமா பூ கேட்கிறாளே என்று அவருக்குக் கோபம் வந்துட்டது. “போ அங்கிட்டு...” என்று அவளைத் துரத்தினார். அக்குழந்தை அவர் திட்டியதைக் கேட்டு, அழுதுகொண்டு அந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தது. அதைப் பார்த்த பூ வியாபாரிக்குப் பாவமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல யாருமே பூ வாங்க வரவும் இல்லை. மனசு கேட்காமல் ஒரு முழம் பூவை அறுத்து அக்குழந்தையின் கையில் கொடுத்தார். உடனே அவள் அழுகை காணாமல் போய் முகத்தில் அப்படியொரு சிரிப்பு மலர்ந்தது. அவர் கொடுத்த பூவைத் தலையில் சூடிக்கொண்டு அங்கேயே சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. அதன் பிறகு சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து, கட்டிய பூ முழுவதும் சீக்கிரமே விற்றுவிட்டதாம்.

“நீ யார் தாயீ? உனக்கு எந்த ஊரு?” என்று அவர் கேட்டதற்கு அக்குழந்தை எந்தப் பதிலும் சொல்லவில்லை. சும்மா அவரையே பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்ததாம். சரி, அனாதைக்கு அனாதை துணையிருக்கட்டும் என்று அவளைத் தன்னுடனே வைத்துக்கொண்டார். அவள் மீது அன்பைப் பொழிந்து வளர்த்தார். தினசரி முதல் பூவை அவளுக்குக் கொடுத்துவிட்டுத்தான் வியாபாரத்துக்குப் போவார். வியாபாரமும் நன்றாக நடந்து நல்ல லாபமும் கிடைத்ததாம்.

பூ மலர்ந்தாள்

ஒருநாள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவள், “அப்பா, திடீர்னு நான் செத்துப்போயிட்டா என்னப்பா செய்வீங்க” என்று கேட்டாளாம். அதைக் கேட்டதும் அவருக்குக் கண்ணீர் வந்துவிட்டது. “அப்படியெல்லாம் பேசாதே தாயி” என்றார். “சும்மா சொல்லுங்கப்பா” என்று அவள் வற்புறுத்தவும், “அப்படி ஒண்ணு நடந்தாலும் நான் சாகிற வரைக்கும் உன்னை மறக்க மாட்டேன். வீட்டுக்கிட்ட கோயில் கட்டிக் கும்பிடுவேன். முதல் பூவை உனக்குப் போட்டுவிட்டுத்தான் மற்றதெல்லாம். நீதான் எனக்குத் தெய்வம் அம்மா” என்று சொல்லி அழுதார்.

“சரிப்பா, வருத்தப்படதீங்க. என் மேலே எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கிடத்தான் அப்படிக் கேட்டேன்” என்றாள். அவரிடம் மட்டுமின்றி ஊரில் எல்லோருடனும் அன்பாகப் பழகுவதும் பெரிய மனுசி மாதிரி பேசுவதுமாக எல்லோருடைய அன்பையும் பெற்ற குழந்தையாக அவள் இருந்தாள்.

இப்படி இருக்கையில் ஒருநாள் அவள் பூக்கடைக்கு வந்து பூக்களுக்குத் தண்ணீர் தெளித்தாளாம். தண்ணீர் தெளித்த கையோடு அப்படியே மயங்கிச் சரிந்தவள்தானாம். எல்லோரும் ஓடி வந்து பார்க்கையில் இருகரம் கூப்பி வணங்கியபடி கண்கள் இரண்டும் வானத்தைப் பார்த்தபடி உயிர் போய்விட்டதாம். அன்றிலிருந்து பண்டாரம் அன்ன ஆகாரமின்றிப் படுத்துவிட்டார். மகள் இறந்த ஒரு வாரத்தில் அவரும் இறந்துபோனார். ஆகவே, குலசேகரநல்லூர் ஊர் மக்கள் அவளுக்குச் சிலை எடுத்து, பூவுக்கு அழுததால் ‘பூ மலர்ந்தாள்’ என்று பெயர் வைத்துக் கும்பிடத் தொடங்கினார்கள். பண்டாரம் சமூகத்தைச் சேர்ந்த மக்களே பூசாரியாக இருந்து அக்கோயிலை நிர்வகித்து வந்தனர். அப்புறம் பங்காளிகளுக்குள் சண்டை வந்தது. ஊரார் கூட்டம் போட்டு, அதில் ஒரு பிரிவினரை இரண்டு மைல் தள்ளிப்போய் வீடு கட்டி வாழுங்கள் என்று அனுப்பிவிட, அங்கே போய் அவர்கள் வாழ உருவான ஊர்தான் மடத்துப்பட்டி. ‘பூ மலர்ந்தாள்’ அம்மன் கோயிலிலிருந்து பிடி மண் எடுத்து வந்து கோயில் எழுப்பி இப்போது மடத்துப்பட்டியிலும் ‘பூ மலர்ந்தாள்’ வணங்கப்படுகிறாள்.

(கதை சொன்னவர்: மு.இராமு, மடத்துப்பட்டி, விருதுநகர் மாவட்டம். சேகரித்தவர்; டி.கனகவள்ளி)

பாப்பாத்தி அம்மன்

இதே போன்ற ஓர் உணர்ச்சிகரமான கதை நெல்லை மாவட்டம் உகந்தான்பட்டியிலும் இருக்கிறது.

ராஜவல்லிபுரம் கிராமத்தில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் அரசப்ப பிள்ளை என்பவர் வீட்டுக்கு இரண்டு வயதுப் பெண் குழந்தையுடன் ஒரு பிராமணப் பெண் வந்து அடைக்கலம் கேட்டார். அரசப்பரும் இரக்கப்பட்டு, அடைக்கலம் கொடுத்தார். அக்குழந்தையின் மீது அரசப்ப பிள்ளையும் அன்பு காட்டினார். சில நாட்கள் கழியவும் அந்தக் குழந்தையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தத் தாய் இறந்துபோனாள். என்னதான் அரசப்ப பிள்ளை அன்பைக்கொட்டி வளர்த்தாலும், தாயின் பிரிவைத் தாங்க முடியாத அக்குழந்தை தாயின் ஏக்கத்திலேயே இறந்துவிட்டது. குழந்தையை வளர்த்த பாசம் அரசப்ப பிள்ளையையும் விட்டு வைக்கவில்லை. சீக்கிரமே அவரும் காலமானார்.

ராஜவல்லிபுரத்தில் ‘பாப்பாத்தி அம்மன்’ என்று அக்குழந்தையின் பேரால் சாமி எழுப்பி தைப்பொங்கலன்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அந்த ஊராருக்குத் தெரியாமல் பிடிமண் எடுத்து வந்து உகந்தான்பட்டியில் கோயில் கட்டி இங்கும் ‘பாப்பாத்தி அம்ம’னை வழிபடுகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், பொங்கல் வைப்பவர்கள் ஆண்கள். பெண்கள் அந்தப் பக்கமே வர மாட்டார்கள். அக்குடும்பங்களில் அரசப்பன், அரசம்மாள், பாப்பாத்தி போன்ற பெயர்களையே குழந்தைகளுக்கு இன்றளவும் சூட்டிவருகிறார்கள்.

(கதை சொன்னவர்: சங்கர சதாசிவம் பிள்ளை, உகந்தன்பட்டி, சேகரித்தவர்: ஹெப்சிபா சாம்)

பாசமெல்லாம் குழந்தைப் பருவத்தில் மட்டும்தானா?

மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் சொந்த ஊர் ராஜவல்லிபுரம். கொலை, தற்கொலை இல்லாமலும் பெண் தெய்வங்கள் எழுப்பப்பட்ட கதைகள் 30-40 சதவீதம் தமிழகத்தில் உண்டு. மேலே சொல்லப்பட்ட இரண்டு கதைகளிலும் தான் பெறாத பிள்ளையின் அகால மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத தகப்பன்மார்கள் தாங்களும் மாண்டுபோகின்றனர். ஆனாலும், மூலகாரணமாக இருந்த பெண் குழந்தைக்குத்தான் சிலை எடுப்பும் வழிபாடும் என நம் சமூகம் வைத்திருக்கிறது. தகப்பனின் சோகத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக ராஜவல்லிபுரத்தில் பொங்கல் வைப்பது ஆண்களுக்கு மட்டும் உரிய கடமையாக வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளது. எதைச் செய்தால் மகளை இழந்த தகப்பனின் மனம் ஆறுதலடையுமோ அதைச் செய்யவே நம் சமூகம் பெண்பிள்ளைகளுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவதாகக் கொள்ளலாம்.

சோகத்தில் பெரிய சோகம் ‘புத்திர சோகம்’தான் என்பது வழி வழியாக நம் சமூகம் பேசிவரும் ஒன்றுதான். பெண் பிள்ளைகளை இழக்கும் தகப்பன்மார்களின் சோகம் தனித்த தன்மைகளைக் கொண்டுள்ளது. மகளை இழந்த தகப்பன்களின் சோகக் கவிதைகளை எல்லா மொழிகளிலும் இன்று வாசிக்க முடிகிறது. கவிதை எழுத முடியாத காலத்தின் சோகக் கவிதைகளாகத்தான் பூ மலர்ந்தாள், பாப்பாத்தி அம்மன்கள் சிலைகளாக நம் வாசிப்புக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

ஆனாலும், பெற்ற, பெறாத சின்னஞ்சிறு மகள்கள் மீது பாசத்தைப் பொழியும் ‘பாசக்காரப் பயபுள்ளைகளான’ இதே தகப்பன்கள் பருவ வயதில் மகள்களின் விருப்பத் தேர்வுகளை ஏற்காமல் தடியெடுக்கும் கொலைகாரப்பாவிகளாக மாறிவிடுவதை என்ன சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்க மறுக்கிறது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

ஓவியம்: அ.செல்வம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்