ஒலிம்பிக் செல்லும் சென்னை கடலோடி :

By மிது கார்த்தி

விளையாட்டு விரும்பிகள் மத்தியில் உலவிக்கொண்டிருக்கும் பேச்சு இதுதான். வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மூன்றாவது தமிழகப் பெண் 23 வயதாகும் நேத்ரா குமணன். பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்திருக்கும் முதல் பெண்ணும் இவர்தான்!

இந்தியாவைப் பொறுத்தவரை ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டி என்பதெல்லாம் மேற்கத்திய நாட்டினர் பங்கேற்கும் ஒரு விளையாட்டு மட்டுமே. ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, பொதுவாகவே பெரிய விளையாட்டுத் தொடர்களில் படகோட்டும் விளையாட்டில் இந்தியர்களைப் பார்ப்பதே அரிது. 125 ஆண்டு பாரம்பரியமிக்க ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒன்பது இந்தியர்கள் மட்டுமே பாய்மரப் படகுப் போட்டியில் களம் கண்டுள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆண்கள். முதன் முதலாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியப் பெண் ஒருவருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. அதைச் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் சென்னைப் பெண் நேத்ரா.

அண்மையில் ஓமனில் நடந்துமுடிந்த முஸானா ஓபன் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டியில் ‘லேசர் ரேடியல்’ பிரிவில் பங்கேற்ற நேத்ரா குமணன், ஆறாம் இடத்தைப் பிடித்தார். ஆனால், ஒட்டுமொத்தமாக அந்தத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். டாப் ரேங்கிங் பெற்ற அந்த இடம்தான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதற்கான வாசலை நேத்ராவுக்குத் திறந்து தந்திருக்கிறது. முஸானா சாம்பியன்ஷிப் போட்டியில் நேத்ரா வெளிப்படுத்திய அற்புதமான திறமைதான் ஒலிம்பிக் வாய்ப்பை அவருக்கு உறுதிப்படுத்தியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் ‘லேசர் ரேடியல்’ பிரிவில்தான் நேத்ரா களம் காண உள்ளார்.

விளையாட்டு விரும்பியான நேத்ராவுக்கு 2009-ல் இதேபோன்றதொரு கோடைக் காலத்தில்தான் பாய்மரப் படகு விளையாட்டு அறிமுகமானது. தமிழ்நாடு பாய்மரப் படகுச் சங்கம் நடத்திய முகாமில் நேத்ரா பங்கேற்றபோது அவருக்கு 12 வயது. படகோட்டும் விளையாட்டுக்கு வருவதற்கு முன்பே டென்னிஸ், கூடைப்பந்தாட்டம், சைக்கிளிங் எனப் பல விளையாட்டுகளில் நேத்ரா ஆர்வம் கொண்டிருந்தார். பரதநாட்டியம் மீது தீராக் காதலில் இருந்தார். ஆனால், படகோட்டும் விளையாட்டுக்காகத் தனக்குப் பிடித்தமான எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார். “நான் முயன்ற வேறு எந்த விளையாட்டையும்விடப் படகோட்டும் விளையாட்டு வித்தியாசமாகவும் மனரீதியாக நெருக்கமாகவும் இருந்தது” என்று பல சந்தர்ப்பங்களில் நேத்ரா தெரிவித்துள்ளனார். இதுவே அவர் இந்த விளையாட்டு மீது கொண்டிருக்கும் பிடிப்புக்குச் சான்று.

பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பிறகும் படகோட்டும் விளையாட்டில் அதிதீவிர பயிற்சியை மேற்கொண்டுவந்த நேத்ரா, பல முறை தேசியப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இரண்டு முறை இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேத்ரா பங்கேற்றபோது அவருக்கு 16 வயதுதான். அந்தப் போட்டியில் நேத்ரா ஏழாம் இடத்தையே பிடித்தார். மீண்டும் 2018-ம்ஆண்டில் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்ற நேத்ரா, அப்போது ஐந்தாம் இடத்தில்தான் வர முடிந்தது.

2020 ஜனவரியில் மியாமியில் நடந்த ஹெம்பல் உலகக் கோப்பைத் தொடர்தான் நேத்ராவுக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. அந்தத் தொடரில் அவர் வெண்கலம் வென்று புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகக் கோப்பைப் பாய்மரப் படகுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற சிறப்பையும் பெற்றார். தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள கேனரி தீவில் தங்கிப் பயிற்சி பெற்று வரும் நேத்ரா, தாமஸ் எஸ்ஸஸ் என்கிற ஹங்கேரி வீரரின் பயிற்சியில் தன்னை மெருகேற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சியின் கீழ்தான் நேத்ரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெறக் காரணமாக இருந்த முஸானா சாம்பியன்ஷிப்பில்கூட, நேத்ரா வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டார். அந்தத் தொடரில் பங்கேற்ற போட்டிகளில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதைவிட, ஒவ்வொரு போட்டியிலும் முதன்மையான இடங்களில் இருப்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டார் நேத்ரா. அப்படி முதன்மையான இடங்களைப் பிடித்துப் புள்ளிகளை உயர்த்தித்தான் ஒட்டுமொத்த புள்ளிக் கணக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, ஒலிம்பிக்கிற்கான வாய்ப்பை உறுதிசெய்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இதே உத்தியைப் பின்பற்றினால், நேத்ரா ஒலிம்பிக் பதக்கத்தோடு நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்