“சென்ற ஆண்டு ஷீரடியில் சாய்பாபாவின் பாடல்களை வெளியிட்ட நாளில், முழுக்க முழுக்க சிவனின் மகிமைகளை மட்டுமே கொண்ட இசைமாலையை உருவாக்க வேண்டுமென்றும், அதை நானே தயாரிக்கிறேன் என்றும் எனது நண்பர் முகமது சாலி சலாலுதீன் கேட்டுக்கொண்டார். அப்படி உருவானதுதான் ஆத்ம லிங்கம் இசைமாலை." என்கிறார் ஆர்.கே. சுந்தர்.
பெருந்தொற்றால் ஓராண்டுக்குத் தொழில் பாதிக்கப்பட்டாலும், அதையே சாதகமாக்கிக்கொண்டு மிகவும் பொறுமையாகவும் நேர்த்தியாகவும் ‘ஆத்ம லிங்கம்’ ஆல்பத்துக்கான பாடல்களை தமிழின் இனிமையை இழைத்துஇழைத்து எழுதியிருக்கிறார் டாக்டர் கிருதியா. அந்தப் பாடல்களுக்கு இசையில் என்னென்ன செழுமை சேர்க்கமுடியுமோ அத்தனையையும் சேர்த்து இசையமைத்திருக்கிறார் ஆர்.கே.சுந்தர்.
`ஆலயம்தோறும்’ பாடலில் பல்வேறு வகைப்பட்ட லிங்கங்களின் அறிமுகத்தை, நிறுத்தி நிதானமான இசையின் பின்னணியில் சொல்கின்றனர். லிங்க சொரூபத்தின் தாத்பர்யமே ஆதியும் அந்தமும் இல்லாதது என்பதை உணர்த்துவதுதான். அதற்கேற்ப பாடலின் ஒவ்வொரு வரியின் தொடக்கமும் முடிவும் ஒரே ஸ்வரஸ்தானங்களோடு அமைத்திருப்பதன்மூலம் இந்தப் பாடலுக்கான இசையும் ஆதியும் அந்தமும் இன்றி ஒலிக்கிறது!
`காசி தொடங்கி’ பாடலில் மனித உடலே சிவமாகும் எனும் தத்துவத்தோடு ஒலிக்கிறது. இயற்கையே சிவனின் திருவுரு என்பதற்கு ரிஷிகேசம் சாட்சியாக விளங்குகிறது என்கிறது பாடல்.
ஆணும் பெண்ணும் சமம் என்னும் அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தை விளக்குகிறது `பொன்வண்ண மேனி’ என்னும் பாடல். `நடனத்துக்கு அரசனாக ஏன் நடராஜன் அழைக்கப்படுகிறார்?' என்பதை புராணங்களின் துணையோடு விளக்குகிறது `சம்போ மகாதேவா' பாடல்.
`நஞ்சு உண்ட’ என்னும் சிவனடியாரின் ஆண்டிப் பாடல், சிவனுக்கு மிஞ்சிய எந்த சக்தியும் இந்த உலகில் இல்லை என்னும் தத்துவ விசாரத்தை முன்வைக்கிறது.
சிவ பரிகார ஆலயங்களின் மகிமைகளையும் அந்த புண்ணிய ஸ்தலங்களின் பெருமைகளையும் எடுத்துரைக்கிறது `கொன்றை மாலை சூடும்’ பாடல். சிவ தாண்டவத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் `கண்டம்’ என்னும் தாளக்கட்டில் அமைந்திருக்கிறது `யார் காணக் கூடும்?’ பாடல். 108 சிவ ஸ்தலங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அளிக்கிறது `ஓம் நமசிவாய’ என்னும் பாடல். பாடல்களை அனந்து, எஸ்.ஜே.ஜனனி, ரம்யா துரைசுவாமி, சுர்முகி, ஷிவானி ஆகியோர் பாடலின் தன்மையை உணர்ந்து உருக்கமாகப் பாடியிருக்கின்றனர்.
ஆத்ம லிங்கம் இசை மாலையைக் காண: https://bit.ly/3a2M0zo
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago