கரோனா அச்சுறுத்தலால் சுமார் 10 மாதங்கள் கழித்து வெளியாகவுள்ளது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்' திரைப்படம். அதை இயக்கியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர். கமர்ஷியல் படத்தை சுவாரசியம் குன்றாமல் இயக்குவதில் கில்லாடி எனப் பெயர்பெற்றிருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து...
விஜயை இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது?
பெரிய ஸ்டாரை எப்படிக் கையாளப் போகிறோம் என்கிற பயம் ‘கைதி' படத்தின் போதும் இருந்தது. ஆனால், முதல் இரண்டு நாள்களிலேயே அது உடைந்துவிட்டது.
இது விஜய் படமாக இருக்குமா, லோகேஷ் கனகராஜ் படமாக இருக்குமா?
இருவருடைய படமாகவும் இருக்கும். விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதைத் தாண்டி, அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்க வேண்டும். பாடல்கள், சண்டைக் காட்சிகள், மாஸ் காட்சிகள் என அனைத்துமே இந்தப் படத்தில் இருக்கின்றன. அவற்றை முடிந்த அளவுக்கு யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறேன். அரங்குகளில் எடுக்கப்பட்டப் பாடல்கள் இருக்காது. பாடல்களையும் கதையோடு பயணிப்பதுபோல் இயக்கியுள்ளேன். இந்தப் படத்தில் பெரிய ஹீரோவுக்கு பெரிய வில்லன் கொண்ட கதையாகப் பண்ணலாம் என்று திட்டமிட்டேன். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான், விஜய் - விஜய் சேதுபதி என்கிற இணை உருவானது. இவர்கள் இருவருக்கும் இடையிலான காட்சிகள் அருமையாக வந்துள்ளன. அந்த வகையில் ‘மாஸ்டர்’ என்னுடைய படமாகவும் இருக்கும் என்று துணிந்து சொல்லலாம்.
விஜய் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்ள உண்மையான காரணம் என்ன?
கதை, கதாபாத்திரம் மீது விஜய் சேதுபதி வைத்த நம்பிக்கை. கதையை எழுதி முடித்தவுடன் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரம் உருவாகிவிட்டதை உணர்ந்தோம். அப்போது விஜய் சேதுபதியை அணுகுவதற்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்போது நண்பர் ஒருவரிடம் யதார்த்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அது அவருடைய காதுக்கும் எட்டிவிட்டது. உடனே எனக்கு போன் செய்து, “ஏன் தயக்கம்?” என்று கேட்டார். உடனே விஜயிடமும் கேட்டேன். அவரோ ‘அவர் பெரிய ஹீரோ.. எதற்கும் அவரிடம் கேட்டுவிடுங்கள்’ என்றார். 20 நிமிடம்தான் கதையைக் கேட்டார். என்னை ரொம்ப நம்பினார். அடுத்து அவருக்கு விஜயை ரொம்பப் பிடிக்கும்.
விஜய், விஜய் சேதுபதி தவிர, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். மாஸ் ஹீரோ படத்தில் அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்குமா?
கதையாக எழுதும்போதே, சுற்றியிருக்கும் துணைக் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன்தான் எழுதுவேன். ஒவ்வொரு நடிகரும் தனித்தனியாக ஸ்கோர் செய்யும் இடங்கள் இருக்கின்றன. மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், பூவையார் எனப் பலருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் கல்வி முறை சார்ந்து எந்தவொரு கருத்தும் கிடையாது. பக்கா கமர்ஷியல் படம். அதில் பொருத்தமான இடத்தில் சின்னதாக ஒரு செய்தி சொல்லியிருக்கிறேன்.
கார்த்தி, விஜய், அடுத்து கமல் எனத் தொடர்ச்சியாக மாஸ் ஹீரோக்களுடன் பணிபுரிந்து வருகிறீர்கள். திரைக்கதைகளில் மாற்றம் கோரும் அவர்களது குறுக்கீடு இருந்ததா?
அப்படி எதுவுமில்லை. இதுவரையில் இயக்கிய படங்கள் அனைத்திலும் ‘நீங்கள் விரும்பிய படத்தை எடுங்கள்’ என்றுதான் அனைவரும் சொன்னார்கள். இதை மாற்ற வேண்டும் என்றெல்லாம் இதுவரை யாரும் சொன்னதில்லை. இன்றைய கதாநாயகர்கள் கதையை மதிக்கத் தொடங்கியிருப்பது பெரிய மாற்றம். எனவே, திரைக்கதைக்கும் இன்னும் எவ்வளவு உண்மையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு இருக்கலாம் என்பது மிகப்பெரிய சுதந்திரம்.
உங்களது ஒரு படம் வெளியாகும் முன்பே, இன்னொரு பெரிய ஹீரோ படம் உங்களுக்குக் கிடைத்துவிடுகிறது. அதன் ரகசியம் என்ன?
அது எனக்குமே ஆச்சர்யம்தான். விஜய் என்னைக் கூப்பிட்டுக் கதை கேட்டபோது, எனது அடையாளம் ‘மாநகரம்' படமாக மட்டுமே இருந்தது. கார்த்தி, கமல் சார் அழைத்துப் படம் பண்ணக் கேட்டபோதும் ‘மாநகரம்' தான் எனது முகவரி. அப்போது ‘கைதி' வெளியாகவில்லை. பெரிய நடிகர்கள் அனைவருமே வளர்ந்துவரும் இயக்குநர்களின் படங்களைக் கவனிக்கிறார்கள் என்பது எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது. இவரோடு படம் பண்ணலாம் என்று தேர்வு செய்கிறார்கள் என்றால், அதை நம்முடைய திறமைக்கும் உழைப்புக்கும் அவர்கள் கொடுக்கும் அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
‘மாநகரம்', ‘கைதி' ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கை இயக்காதது ஏன்?
இயக்கும்படிக் கேட்டார்கள். வேறு படங்களை ஒப்புக்கொண்டதால், இயக்க முடியவில்லை. அது மட்டுமன்றி, மறுஆக்கம் செய்யும்போது படப்பிடிப்பில் பெரிய சுவாரசியமிருக்காது. நான் எழுதி, உருவாக்கியதை, இன்னொருவர் எப்படி இயக்கியிருக்கிறார், நடிகர்கள் எப்படி நடித்திருக்கிறார்கள், ரசிகர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.
‘மாநகரம்' போன்று இனி சின்னப் படங்களை இயக்குவீர்களா?
கண்டிப்பாக. அவல நகைச்சுவைப் படம் பண்ண ஆசையாக இருக்கிறது. இப்போது ஒப்புக்கொண்ட படங்களை எல்லாம் முடித்துவிட்டு, கண்டிப்பாகப் பண்ணும் எண்ணமுள்ளது.
ஒரு படத்தின் டீஸர், போஸ்டர் வெளியானவுடன் வேறொரு படத்தின் காப்பி என்று சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாராட்டும்போது ஏற்றுக்கொள்வதைப் போல், இதையும் ஏற்றுக்கொள்வோமே என்று விட்டுவிடுவேன். ‘மாஸ்டர்’ படத்தையும் காப்பி என்றார்கள். ஆனால், உண்மையல்ல. மேலோட்டமான பார்வைகளுக்கும் பதிவுகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், படம் பண்ண முடியாது. 90 பேர் பாராட்டும் இடத்தில், 10 பேர் திட்டுவார்கள். நாம் அந்த 90 பேர் பாராட்டை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.
‘இரும்புக்கை மாயாவி' என்கிற படத்தைத் தொடக்கம் முதலே எடுக்க நினைத்தீர்களாமே?
ஆமாம்! அது என்னுடைய 2-வது படமாக இருந்திருக்க வேண்டியது. அதில் நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் உண்டு. அந்தக் கதையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago