உஷ்ணமாயிருக்கும்போது உஷ்ணமாயிருக்கிறது

By ஓஷோ

ஜென் குரு ஜோஷுவிடம் அவரது அடிப்படை போதனை என்ன என்று கேட்கப்பட்டது. “உஷ்ணமாயிருக்கும்போது உஷ்ணமாயிருக்கிறது. குளிராக இருக்கும்போது குளிராக இருக்கிறது”, என்று பதிலளித்தார் ஜோஷு. இது என்ன விளையாட்டு; இதுதான் உங்களது தத்துவமா என்று எதிர்வினை கிடைத்தது.

ஜோஷு அமைதியாகப் பதிலளித்தார். “எனது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதெல்லாம் இது மட்டும்தான். தருணம் எதுவாக இருக்கிறதோ, அதில் அப்படியே இரு. அது எப்படிப்பட்டதாக இருப்பினும் சரி. உஷ்ணமாக இருக்கும்போது உஷ்ணமாக இருக்கும். அதற்கு நேர்மாறானதை விரும்பாதே.

விருப்பமென்பது அப்படித்தான் செயல்படுகிறது. குளிராக இருக்கும்போது நீ உஷ்ணத்தை விரும்புகிறாய். இல்லாத ஒன்றை நாடுவதே விருப்பம். நிஜத்துக்கு எதிரானதை ஆசைப்படுவதே விருப்பம். இளமையாக இருக்கும்போது இளமையாக இரு. முதுமையில் முதுமையாக இரு.

000

ஒரு ஜென் குரு மரம் வெட்டிக்கொண்டிருந்தார். அவரது பெயரைப் பற்றிக் கேள்விப்பட்டு நெடுந்தூரத்திலிருந்து வந்திருந்த ஒருவன் மரம் வெட்டிக்கொண்டிருந்தவரிடம் பெயரைச் சொல்லி இருப்பிடத்தை விசாரித்தான். அது நான்தான் என்று ஜென் குரு பதிலளித்தார். சீடர்களோடு ஒரு மடாலயத்தில் இருப்பார் என்று நினைத்திருந்த அவன், ஜென் குருவைப் பார்த்து, நீங்கள்தான் குரு என்றால், ஞானமடைவதற்கு முன்னர் என்ன செய்தீர்கள் என்று கேட்டான்.

“நான் மரம் வெட்டினேன். கிணற்றில் நீர் இறைத்தேன்.” என்றார் குரு.

அப்படியென்றால் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டான் வந்தவன்.

“மரம் வெட்டி, தண்ணீரை கிணற்றிலிருந்து இறைக்கிறேன்.” என்றார் குரு.

வந்தவனோ சலித்துப் போய், “அப்படியென்றால் என்ன வித்தியாசம்? இன்னமும் மரத்தை வெட்டி, கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்தால் ஞானமடைந்ததற்கு என்னதான் அர்த்தம்?" என்று கேட்டான்.

குரு சிரித்தார். அவரோடு மலைகளும் அங்குள்ள மரங்களும் சேர்ந்து சிரித்திருக்க வேண்டும். குரு தங்கியிருந்த மடாலயத்தைச் சுற்றி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சிரிப்பு இன்னும் கேட்கும்படியாகவே இருக்கக்கூடும்.

“நீ ஒரு முட்டாள். ஞானமடைவதற்கு முன்னர் நான் மரத்தை வெட்டினேன். நான் தண்ணீரை இறைத்துச் சென்றேன். தற்போது தண்ணீர் இறைக்கப்படுகிறது. மரம் வெட்டப்படுகிறது. நான் செய்பவன் அல்ல. அதுதான் வித்தியாசம்.”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்