ராமானுஜர், கிருமி கண்ட சோழன் கொடுத்த தொந்தரவிலிருந்து தப்பிப்பதற்காக திருவரங்கத்தை நீங்கி மைசூர் திருநாராயணபுரம் சென்றார். 12 ஆண்டுகளை அங்கே கழித்து சரணாகதி தத்துவத்தைப் போதித்தார்.
இப்படியான சூழ்நிலையில் நெற்றியில் இடுவதற்கான திருமண் தீர்ந்து அதைத் தேடி ராமானுஜர் தவித்தபோது, திருநாராயணபெருமாள் சொப்பனத்தில் தோன்றி, புற்றுக்குள் புதைக்கப்பட்டுள்ள தன்னை எடுத்து ஆராதனை செய் என்று கூறி மறைந்தார். அத்துடன் கல்யாணி புஷ்கரணி கரையில் கருடாழ்வார் கொண்டுவந்து வைத்த திருமண் கட்டி இருக்கிறதென்று திசைகாட்டியும் விட்டார்.
மேல்கோட்டையில் பெருமாள் சொன்ன இடத்தில் புற்று மண்ணை நீக்கிப் பார்க்க விக்கிரகம் கிடைத்தது. மூன்று நாட்கள் திருவாராதனம் பண்ணி கோயிலை அமைத்தார். அடுத்து உற்சவ மூர்த்தி வேண்டுமென்று மக்கள் விரும்பினார்கள். புதிய உற்சவ மூர்த்தி வேண்டாமென்று நினைத்த ராமானுஜர் பழைய மூர்த்தி எங்கேயென்று கேட்டு, காட்டிக்கொடும் என்று திருநாராயணனிடம் விண்ணப்பித்தார். உற்சவ மூர்த்தியான ராமப்ரியர் டெல்லியில் பாதுஷா அரண்மனையில் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. பலராம கிருஷ்ணர்கள் ஆராதித்த உருவம் அவர்.
ராமப்ரியரைத் தேடி ராமானுஜர் டெல்லி பாதுஷாவின் அரண்மனைக்குச் சென்றார். ராமானுஜரின் முகப்பொலிவினால் கவரப்பட்ட பாதுஷா அவரை முன்வந்து வரவேற்றார்.
“தொடர் சங்கிலிகை சலார்,பிளார்-என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்ப” எனக் கண்ணனின் நடையழகைத் தமது திருமொழியில் கூறுவது போல, தன்னிடம் வரும்படி ராமானுஜர் சம்பத்குமாரா என்று பாடி அழைத்தார். சம்பத்குமாரா என்றால் செல்வப்பிள்ளை. ராமப்ரியரின் விக்கிரகமோ குழந்தை போல கிடுகிடுவென ஓடிவந்து, ராமானுஜர் மடியில் அமர்ந்து தனது இருகைகளாலும் அவரின் கழுத்தை ஒரு சிறுபிள்ளை போல ஆசையாய்க் கட்டிக் கொண்டது.
இதனைக் கண்ட சுல்தான் அவ்விக்கிரகத்தை ஆராதனை செய்யத் தகுந்தவர இவரே என ராமானுஜரிடம் பாதுஷா ஒப்படைத்தார். அவ்விக்கிரகம் தான் இன்றளவும் திருநாராயணபுரத்தில் இருந்து உற்சவம் ஏற்கிறார். அந்த செல்வப் பிள்ளை ஆச்சாரியர் மிடறை பிடித்து ஆசையாய், அவர் மடியில் அமர்ந்தது போல் நான் ஆச்சார்ய பக்தி பெறவில்லையே எனத் தாழ்ச்சி கொண்டாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago