டென்னிஸ் உலகில் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் இகா ஷ்வான்டெக். அண்மையில் முடிந்த பிரெஞ்சு ஓபன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற வீராங்கனை இவர். 19 வயதான இகாவின் இந்த ஒற்றை வெற்றி, அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றுள்ளது.
டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பதின்ம வயதில் சிறந்த வீராங்கனை உருவாவது வாடிக்கை. 2020-ம் ஆண்டு முடியும் தறுவாயில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் போலந்தைச் சேர்ந்த இந்த வீராங்கனை, பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்ற முதல்முறையே பட்டம் வென்றிருக்கும் இகாவின் சாதனை மலைக்க வைக்கிறது.
நடாலுக்கு இணையாக...
2020 பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் பட்டம் வென்றார். இந்தத் தொடரில் முதல் போட்டி தொடங்கி இறுதிப் போட்டிவரை ஒரு போட்டியில்கூட செட்டை இழக்காமல் ரஃபேல் நடால் வாகைசூடினார். அவரைப் போலவே மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டி தொடங்கி இறுதிப் போட்டிவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார் இகா ஷ்வான்டெக். டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் ஒற்றையர் ஆடவர், மகளிர் பிரிவில் ஒரு சேர இப்படி நடப்பது இதுவே முதன்முறை.
ரஃபேல் நடாலாவது 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர், அனுபவசாலி. ஆனால், கத்துக்குட்டி என்று நினைக்கப்பட்ட இகா ஷ்வான்டெக் முதல் பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலேயே இந்தச் சாதனையைப் படைத்திருப்பது அரிதானது. அதுவும் தரவரிசையில் 54-வது இடத்தில் இருந்த இகா, 4-வது இடத்திலிருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனினை நேர் செட்டுகளில் வீழ்த்தி, டென்னிஸ் உலகை திரும்ப பார்க்க வைத்தார்.
சவாலான தாரகை
இகா ஷ்வான்டெக், அதிர்ஷ்டவசத்தால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவர் அல்ல. அபாரமான திறமைகள் கொண்டவர். ஏற்கெனவே கடந்த ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றவர். இளையோர் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றவர். எனவே, சீனியர் டென்னிஸில் இகா காலடி எடுத்து வைக்கும்போது சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்ததுபோலவே நடத்திக் காட்டியிருக்கிறார்.
டென்னிஸில் தொழில்முறை போட்டியாளர்களாக இருப்பவர்களுக்கு ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தப் பதின்பருவத்து வீராங்கனையோ அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வெல்லும் பெருங்கனவுடன் இருக்கிறார். “பிரெஞ்சு ஓபனை வெல்லுன் கனவு நிறைவேறிவிட்டது. இன்னும் மற்ற கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறுகிறார் இகா.
இகா யுகம் ஆரம்பம்!
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago