நவ. 7: சிறந்த நீர் மேலாண்மையில் முதலிடம் பிடித்த தமிழகத்துக்கு, மத்திய நீர் சக்தி துறை அமைச்சகத்தால் `தேசிய நீர் விருது’ வழங்கப்பட்டது. மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
நவ. 7: இந்தியாவில் முதன்முறையாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கோயில் அர்ச்சகராக நியமிக்க கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வாரியத்தின்கீழ் சபரிமலை கோயில் உள்பட 1,200 கோயில்கள் உள்ளன.
நவ. 9: இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக யஷ்வர்தன் கே. சின்ஹாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். பிரதமர் தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு இவரைத் தேர்வுசெய்தது.
நவ. 9: மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பெயர் `மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழித் துறைகள் அமைச்சகம்’ என மாற்றப்பட்டது. இத்துறையின் அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா.
நவ. 10: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13ஆவது டி20 கிரிக்கெட் ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐந்தாவது ஐ.பி.எல். வெற்றி இது.
நவ. 10: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் பா.ஜ.க.- ஜே.டி.யூ. அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் இடம்பெற்ற மகா கூட்டணி 110 தொகுதிகளில் வென்றது.
நவ. 10: தேசிய தலைநகரப் பகுதியிலும் காற்றின் தரம் குறைவாக உள்ள மற்ற நகரங்களிலும் பட்டாசு விற்பனை செய்யவும் வெடிக்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது.
நவ. 12: அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் கோவிட்-19 பணிக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் செலின் இடம்பெற்றார். இவருடைய தந்தை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள பெருமாள்பாளையத்தைச் சேர்ந்தவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago