அக். 28: ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அந்த மாநிலத்தில் வேளாண் நிலத்தைத் தவிர எந்த நிலத்தையும் இந்தியக் குடிமக்கள் வாங்க அனுமதிக்கும் புதிய விதிமுறையை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்க முடியாது.
அக். 29: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருக்கும் வி.எம். கடோச், மதுரை தோப்பூரில் அமைய உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தலைவராக நியமிக்கப்பட்டார்.
அக். 30: காய்கறிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் என்ற பெருமையைக் கேரளம் பெற்றது. இதன்படி 16 வேளாண் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக். 31: தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் வகித்தவந்த வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் வழங்கப்பட்டது.
அக். 31: காங்கிரஸ் தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத்துக்கு வழங்கப்பட்ட கட்சியின் நட்சத்திர பிரசாரகர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மாதிரி நடத்தை விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அக். 31: அணு ஆயுதங்களை தடைசெய்வதற்கான ஐ. நா. அவையின் ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல் அளித்தன. ஹோண்டுராஸிடமிருந்து 50ஆவது நாடாக ஒப்புதல் பெறப்பட்டதாக ஐ. நா. அவை தெரிவித்தது.
நவ. 3: அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 270 தேர்தல் குழு வாக்குகளைப் பெறுபவரே அதிபராக முடியும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 290 தேர்தல் குழு வாக்குகளைப் பெற்று, 214 தேர்தல் குழு வாக்குகளைப் பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் அதிபருமான டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்தார்.
நவ. 6: கரோனா தொற்று, குளிர் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு டெல்லி, ராஜஸ்தான், ஒடிஷா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடகத்திவிலும் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவ. 6: மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கே பொருந்தும் என்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குப் பொருந்தாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago