இந்திய வரைபடத்தில் தேட வேண்டிய இடத்திலிருக்கும் சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். நவம்பர் முதல் ஜனவரிவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்குக் கூடுதல் பந்துவீச்சாளராகத் தேர்வாகியிருக்கிறார் நடராஜன். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ‘யார்க்கர் மன்னன்’ என்று பெயரெடுத்த நடராஜனின் கிரிக்கெட் பயணம் கரடுமுரடான பாதையைக் கடந்துவந்த ஒன்று.
சின்னப்பம்பட்டி, வயல்வெளிகள் நிறைந்த கிராமம். அந்த வயல்வெளிகளில் தீவிரமாகக் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களில் நடராஜனும் ஒருவர். ரப்பர் பால், டென்னிஸ் பால் என்று எப்போதும் கிரிக்கெட்டே கதியெனக் கிடந்திருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சேலத்தில் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கியபோதும், கிரிக்கெட்டை அவர் விடவேயில்லை.
சென்னைக் களம்
நடராஜனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியவர்கள் எல்லாம் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறினாலும், கிரிக்கெட் மைதானத்திலேயே நின்றுகொண்டிருந்தார் நடராஜன். கூலி வேலை செய்யும் பெற்றோரும் நடராஜனின் கனவுக்குத் தடைபோடவில்லை. நடராஜனின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர்தான், நடராஜனுக்கு அடுத்த கட்டத்துக்கு வழிகாட்டினார். சென்னையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிட்டார்.
கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று நடராஜன் முடிவு செய்திருந்ததால், தாமதிக்காமல் சென்னைக்கு வந்துவிட்டார். அங்கே கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவருடைய வேகப் பந்துவீச்சு தமிழகத் தேர்வாளர்களை கவர, டிவிஷனல் மேட்சுக்குத் தேர்வானார். பின்னர் தமிழ்நாடு அணி, ரஞ்சி கிரிக்கெட் என அடுத்தடுத்து முன்னேறினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி.என்.பி.எல். 20 ஓவர் போட்டிகள் வந்த பிறகுதான் நடராஜனின் திறமையை உலகுக்குப் புலப்பட்டது. அவருடைய கட்டுக்கோப்பான வேகப் பந்துவீச்சைக் கண்டு ஐ.பி.எல். கதவு திறந்தது.
யார்க்கர் மன்னன்
நடராஜன் மீது நம்பிக்கை வைத்து 2017-ல் பஞ்சாப் அணிக்காக வீரேந்திர சேவாக் ரூ.3 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடத் தொடங்கிய பிறகு ‘யார்க்கர்’ பந்துவீச்சு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். யார்க்கர் வீசிப் பயிற்சி எடுக்கும்போது பலமுறை காயமுற்றார். ஐ.பி.எல். போட்டிகளிலும் காயம் அடையவே அவருடைய முன்னேற்றம் இடையில் தடைப்பட்டது. பின்னர் 2018-ல் பஞ்சாப் அணியிலிருந்து ஹைதராபாத் அணி நடராஜனை ஏலத்தில் எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிவருகிறார் நடராஜன். மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் நடராஜன், அவ்வப்போது யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி வீரர்களைத் திணறடித்துவருகிறார். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 6 பந்துகளை ‘யார்க்க’ராக வீசி சாதனையும் புரிந்திருக்கிறார். இவருடைய பந்துவீச்சில் எம்.எஸ். தோனி, விராட் கோலி, ஆண்ட்ரு ரஸல் ஆகிய சாதனை பேட்ஸ்மேன்களும் காலியாகினர்.
இந்திய அணியில்…
நடராஜன் மீது கேப்டன் விராட் கோலியின் பார்வை பதிந்தது. இந்தியத் தேர்வாளர்களின் கவனமும் குவிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் கரோனா காரணமாகக் கூடுதல் வீரர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். நால்வர் கூடுதலாக அழைத்துச் செல்லப்படும் நிலையில், அவர்களில் 29 வயதான நடராஜனும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் பேட்ஸ்மேன்களுக்கு வலைப் பயிற்சியில் அவர் பந்துவீச உள்ளார். மாற்று வீரர்கள் களமிறங்கும் சூழலில் நடராஜனுக்கும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இன்றைக்கு இந்திய அணியில் உள்ள முதன்மை வீரர்கள் பலர் ஐ.பி.எல். கிரிக்கெட் மூலமே கவனம் பெற்று முன்னேறியவர்களே. சேலம் சின்னப்பம்பட்டி நடராஜனுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும்!
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago