ஏர்வாடி அருகே நடுக்கடலில் திடீரென உருவான மணல் திட்டு : கண்ணாடி படகில் சென்று காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நடுக்கடலில் உருவான மணல் திட்டைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பவளப் பாறை, கடல் பாசி, கடல் புல், கடல் சங்கு, ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாக பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (கடல் பசு), ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன.

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் குருசடை தீவு, முயல் தீவு, வாழை தீவு, வாலி முனை தீவு, ஆனையப்பர் தீவு, நல்லதண்ணி தீவு, உப்புத் தண்ணி தீவு உட்பட 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளின் அழகைக் காணவும், அரியவகை கடல் வாழ் உயிரினங்களைப் பார்வையிடவும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்திலிருந்து நடுக்கடலில் உருவான மணல் திட்டைப் பார்வையிட கடந்த ஆண்டு வனத்துறையால் படகு சவாரி தொடங்கப்பட்டது. சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் நடுக்கடலில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் தீவு போல இந்த மணல் உள்ளது. இந்தத் தீவுக்கு வனத்துறையால் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட இரண்டு படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடலுக்கு அடியில் உள்ள இயற்கை அழகைப் பார்வை யாளர்கள் கண்டு களிக்கலாம்.

ஒரே நேரத்தில் 12 பேர் வரை இந்தப் படகில் சவாரி செய்யலாம். ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் படகு சவாரி செய்பவர்களுக்கு கடல் நடுவே மணல் திட்டில் இறங்கி பார்வையிடுவதற்கு 10 நிமிடங்கள் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால், ஏர்வாடி பகுதிக்கு வரும் சுற்றுலா மற்றும் ஆன்மிக பக்தர்கள் ஆர்வத்துடன் மணல் திட்டை கண்டு ரசித்து வருகின்றனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு ஏற்றார் போல கண்ணாடி பொருத்திய படகு சவாரியை வனத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் படகு சவாரி மூலம் கடலுக்கடியில் உள்ள பவளப்பாறை மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களையும் காண முடிவதால் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நடுக்கடலில் தீவுபோல உருவாகி இருக்கும் மணல் திட்டைப் பார்வையிட வசதி செய்திருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்