சுருளி அருவியில் மாணவர்கள் கட்டணமில்லாமல் நீராட அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தேனியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் க.வீ.முரளீதரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), கேஎஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பேசியதாவது: 33 சதவீத வனப்பகுதி என்ற கொள்கைக்கு மிகையாக 36.72 சதவீத அரசு வனப்பகுதி பரப்பளவை தேனி மாவட்டம் கொண்டுள்ளது.
அடர்த்தியான காடுகளை கொண்டுள்ளதால் மற்ற மாவட்டங்களை விட தேனி அதிக மழைப்பொழிவை பெற்று வருகிறது. விரைவில் சுருளி அருவியில் நீராட அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள்கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படுவர். குமுளியில் பேருந்துநிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
போடியில் இருந்து அகமலைக்கு சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் மலைமாடு மேய்ச்சல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
60 பேருக்கு சுழல்நிதி கடனாக ரூ.6 லட்சமும், 17 பயனாளிகளுக்கு வன உயிரினங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீடாக ரூ.19 லட்சமும் வழங்கப்பட்டது.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உப்ரித்தி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் தீபக்வஸ்தவா, வீ.நாகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago