கரோனா அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் - அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளிவர வேண்டும் : கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது அவர் கூறியது:

தமிழக அரசின் கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் மூலம் கரோனா தொற்று குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல், சளி கண்டறியும் முகாம்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள், உடல் வெப்பநிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக 9 பகுதிகள் அடையாளம் கண்டறியப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் தடுப்புகள் அமைத்தல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள் அதிகப் படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடுதலான படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவிட் தடுப்பு கண்காணிப்பு மையங்களில் 320 படுக்கை வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் 420 படுக்கை வசதிகளும் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியைக் கடை பிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகிய விதிமுறைகளை மீறியதற்காக பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, காவல்துறை, உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மூலம் பொதுச்சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.16,91,80 அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காய்ச்சல், இருமல், தொண்டைவலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை களுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்