அய்யம்பாளையம் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு : மாணவர்கள், பெற்றோர்கள் கண்டுகளித்தனர்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நிழல் இல்லா நாள் நிகழ்வு நடைபெற்றது.

அய்யம்பாளையம் ஆரம்பபள்ளியில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.வீரையா “நிழல் இல்லா நிகழ்” குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டு நிழல் இல்லா நிகழ்வை கண்டுகளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.வீரையன் கூறுகையில், பூமியில் நாள் தோறும் இரவும் பகலும் வந்தாலும், தினமும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது எனக் கருதுகிறோம். உண்மையில் வருடத்தில் ஓரிரு நாட்கள் தான் அதுவும் நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கில் மறைகிறது. மற்ற தினங்களில் வடகிழக்கிலோ அல்லது தென்கிழக்கிலோ உதித்து வட மேற்கிலோ அல்லது தென் மேற்கிலோ மறைகிறது..

அதேபோல நீண்ட பகல் உள்ள நாள் ஜூன் 21, நீண்ட இரவு ஏற்படும் நாள் டிசம்பர் 21. இதற்கு காரணம் சூரியனின் வடதிசைச் செலவு மற்றும் தென்திசைச் செலவு. அதாவது உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம். இதுபோன்ற நாட்கள்தான் சிறப்பானநாட்கள். நல்லநாள், கெட்டநாள் என்பதெல்லாம் மனிதர்கள் உருவாக்கிக்கொண்டவை தான்.

ஒவ்வொரு நாளும் நண்பகல் 12 மணிக்கு உச்சிப் பொழுது என நாம் அறிந்திருக்கிறோம். அந்நேரம்தான் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என அனைவரும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் அலகாபாத் நகரில் மட்டும்தான் சரியாக 12 மணிக்கு உச்சிப் பொழுது இருக்கும். மற்ற பகுதிகளில் உச்சிப் பொழுது நேரம் என்பது மாறுபடும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 16 பகல் 12.16 லிருந்து 12.20 க்குள் இருப்பதுதான் உண்மையில் நமக்கு நண்பகல்.

அதே போல தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போலத் தெரிந்தாலும் வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். இதுவும் கூட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிடையாது. பூமத்திய ரேகை, கடகரேகை, மகரரேகை பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.. அவ்வாறு உச்சியில் வரும் பொழுது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவான நிழல் அப்பொருளின் பரப்புக்குள்ளேயே விழுவதால் அதன் நிழலை நாம் பார்க்க முடியாது.

இந்நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடக்கும். எனவே நிழல் இல்லா தருணம் ஏற்படும் அந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.

இந்நிகழ்வு எல்லாப் பகுதிகளிலும் ஒரே நாளில் வருவதில்லை. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 16 நிழல் இல்லா நாள். ஒவ்வொரு பகுதியும் அமைந்துள்ள இடத்திற்கேற்ப நிழல் இல்லா நாள் ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நிழல் இல்லா நாள் குறித்த பிரச்சாரம் அல்லது உற்றுநோக்கல் என்பது உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையவழி பயிற்சி முகாம் நடத்தியது, என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நிழல் இல்லா நாள் குறித்த பிரச்சாரம் அல்லது உற்றுநோக்கல் என்பது உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்