திண்டுக்கல் நகரில் மின்கம்பத்தை அகற்றாமலேயே சாலை விரிவாக்கப் பணி நடந்துள்ளதால், மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்படும் முன், மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் பேகம்பூரில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. சாலையின் நடுவே காங்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதற்கு ஒரு சாலையும், நகருக்குள் வருவதற்கு ஒரு சாலையையும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
வத்தலகுண்டு சாலையில் இருந்து நகருக்குள் வரும் சாலை பகுதியில் இருந்த மின்கம்பங்களை சாலை யோரத்துக்கு மாற்றாமல், அப்படியே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்களில் மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கனரக வாகனங்கள் மோதினால் மின்கம்பமே சாய்ந்து பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறவழிச்சாலையில் இருந்து திண்டுக்கல் நகர் பேகம்பூர் செல்லும் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை முறையாக அகற்றி சாலையோரம் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர், மின்வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago