காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் ஓராண்டாக ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.
காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் செல்லும் ரயில் வழித்தடத்தில் மந்தமாக நடந்த அகல ரயில் பாதை பணியால் 7 ஆண்டுகள் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன.
தொடர் போராட்டங்களால் 2019 ஜூன் 1-ம் தேதியில் இருந்து காரைக்குடி, திருவாரூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் 72 ரயில்வே கேட்களில் கீப்பர்கள் நியமிக்கவில்லை. இதையடுத்து மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டது. அதாவது ரயிலில் இன்ஜினுக்கு அடுத்துள்ள முதல் பெட்டியில் ஒரு கேட்கீப்பரும், கடைசிப் பெட்டியில் ஒரு கேட் கீப்பரும் பணியில் இருப்பர்.
ரயில்வே கேட் அருகே ரயில் சென்றதும், ரயில் நிறுத்தப்பட்டு, முதல் பெட்டியில் இருக்கும் கீப்பர் கேட்டை அடைப்பார். அதன்பிறகு ரயில், கேட்டை கடந்ததும் கடைசி பெட்டியில் இருக்கும் கீப்பர் கேட்டை திறந்துவிடுவார். இதேமுறையில் 72 ரயில்வே கேட்டுகளும் அடைக்கப்பட்டு, திறக்கப்பட்டன. இதையடுத்து 110 கி.மீ. தொலைவை ரயில் கடக்க 6 மணி நேரம் ஆனது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து சில ரயில்வே கேட்களில் மட்டும் தற்காலிக கேட்கீப்பர்களாக முன்னாள் படைவீரர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில் கரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
மற்ற வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும்நிலையில் ஓராண்டாக ரயில் இயக்கப்படாததால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவர் சாமி.திராவிட மணி கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப் படாதது வருத்தமளிக்கிறது. மேலும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கேட் கீப்பர்களின் பணிக்காலமும் மே மாதத் துடன் முடிவடைகிறது. ரயில்வே கேட் களில் நிரந்தரமாக கேட்கீப்பர்களை நிய மித்து மீண்டும் காரைக்குடி, திருவாரூர் இடையே ரயில் இயக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago