திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தட்டுப்பாடுகள் இன்றி போதுமான மருந்துகள் இருந்தும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைவாகவே உள்ளது. எந்தவித அச்சமும் இன்றி 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டு தொடர்ந்து செயல்பட்டுவந்த நிலையில், பழநி, கொடைக்கானல் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்பட்ட கரோனா வார்டுகள், அப்பகுதியில் கரோனா பாதிப்பு குறைவு காரணமாக வழக்கமான வார்டுகளாக மாற்றப்பட்டன.
இந்நிலையில் பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புள்ளானவர் களுக்கென தனி வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, கொடைக்கானல் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் செல்வதை கண்டறிந்து அபாராதம் விதிப்பது, கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைப்பது என கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் தினமும் 50 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் பலரும் கூட்டமாக கலந்துகொண்டதுதான் கரோனா பரவலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைத்து வருகிறது, நேற்று முன்தினம் டீ கடை உள்ளிட்ட இரண்டு கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
இதுகுறித்து கரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் உள்ள மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முகக்கவசம் அவசியம், கைகழுவுதல் அவசியம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 46 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. போதுமான தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தயங்காது தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
தினமும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. களப்பணியாளர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், என்றார்.
போதுமான மருந்துகள் இருந்தும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைவாகவே உள்ளது என கூறப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதேபோல் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கரோனா பரவலை தடுக்க, கரோனா விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைப்பிடித்து ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago