தேனி மாவட்டம் மேகமலை வனப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித் துள்ளது. இதனால் குடிநீருக்காக காட்டு யானை கிராமப் பகுதிகளுக்குள் வரத் தொடங்கி உள்ளன.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்த மலைக் கிராமம் மேகமலை. இப்பகுதி யில் தனியார் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன.
தற்போது கோடைவெயில் அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதால் அங்குள்ள நீர்த்தேக்கங்கள் வெகுவாய் வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக பல்வேறு விலங்குகள் கிராமம் மற்றும் இங்குள்ள அணைப்பகுதிகளுக்கு அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன.
இதில் காட்டு யானை ஒன்று தேயிலைத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் அமாவாசை, முத்தையா ஆகியோரை இந்த யானை மிதித்துக் கொன்றது.
இந்நிலையில் குழு அமைத்து யானை வருவதைக் கண்காணிக்கவும், அவற்றை வனத்துக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 3 மாதமாக யானை நடமாட்டம் இல்லாத நிலையில் மீண்டும் ஹைவேவிஸ் அணைப்பகுதியில் இதன் நடமாட்டம் தென்பட்டது. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் சிலர் பாதுகாப்பாக பின்தொடர்ந்து எதிர்வரும் பொதுமக்களை கூச்சலிட்டு ஒதுங்கிப் போகச் செய்தனர். பின்பு இந்த யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago