இந்த ஆண்டும் சித்திரை திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, முளைப்பாரி, கரக கலயங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே வீரபாண்டி கவுமாரி யம்மன், அல்லிநகரம் வீரப்ப அய்யனார், ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனாவினால் இக்கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறவில்லை.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று குறைந் ததால் இந்த ஆண்டு விழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
எனவே பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, பல்வேறு வகையான விளக்குகள், மாடம், கரக கலயம், அம்மன் அலங்கார கலயம், நேர்த்திக்
கடன் பொம்மைகள், கை,கால் உருவங்கள்போன்றவை ஏராளமாக செய்யப்பட்டன. லட்சுமிபுரம், பூதிப்புரம், தேனி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக் கணக்கில் உருவாக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனாவினால் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மண்பாண்ட தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி பங்களாமேட்டைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், சித்திரை திருவிழாக்களுக்காக கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான மண் பாண்டங்களை தயாரித்து வைத்துள் ளோம். மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கொள்முதலுக்காக முன்பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டும் திருவிழாவுக்கு தடை விதித்துள்ளதால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு கடுமையான பொருளாதார இழப்பும் ஏற்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago