ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி : கண்காணிப்பு அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஷ் ஆலிவர், மாவட்ட எஸ்பி கார்த்திக் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது,

மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 27 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்தால் கண்டறிந்து, அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு, முழு உடல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளி மாநிலத்தில் இருந்து ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அங்கு வந்து தங்குபவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யவும், அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்