போடி, ஆண்டிபட்டி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு - தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் :

By செய்திப்பிரிவு

பெரியகுளம், கம்பம் தொகுதி வாக்குச் சாவடிகளில் தலா ஒரு மின்னணு இயந்திரமும், ஆண்டிபட்டி, போடியில் தலா 2 மின்னணு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

தேனி மாவட்டத்தின் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்காக 576 இடங் களில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் நடைபெற உள்ள தேர்தலுக்காக மின்னணு இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயந்திரத்திலும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்யும் நோட்டா சின்னமும் இடம்பெற்றுள்ளது. இதையும் சேர்ந்து ஒரு இயந்திரத்தில் அதிகபட்சம் 16 சின்னங்களை பொருத்த முடியும்.

தற்போது பெரியகுளம், கம்பம் தொகுதிகளில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோட்டாவையும் சேர்ந்து 16 சின்னங்கள் வருவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்படி பெரியகுளம் தொகுதியில் 398 வாக்குச்சாவடிக்கும், கம்பத்தில் 392 மையத்துக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நோட்டாவையும் சேர்த்து ஆண்டிபட்டியில் 21 சின்னங்களும், போடியில் 25 சின்னங்களும் வருவதால் இத்தொகுதிகளில் தலா 2 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஆண்டிபட்டியில் 776 இயந்திரமும், போடிக்கு 766 இயந்திரங்களும் பயன் படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குப் பதிவின் போது இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக ஒவ்வொரு தொகுதிக்கும் 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்