பழநியில் இன்று தேரோட்ட :

By செய்திப்பிரிவு

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவில் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கிரிவீதிகளில் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 22-ம் தேதி திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நடந்த மண்டகப்படியில் சுவாமி வெள்ளிகாமதேனு, தங்கமயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபட்டனர். கரோனா கட்டுப்பாடு காரணமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி யளித்தார். தொடர்ந்து இரவில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை (மார்ச் 28) நடைபெறவுள்ளது. வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் எழுந்தருள பழநி மலைக்கோயில் அடிவாரம் பாதவிநாயகர்கோயில் அருகே இருந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க, கிரிவீதிகளில் தேர் வலம்வர உள்ளது. திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதால் பழநி டி.எஸ்.பி. சிவா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

விழாவின் நிறைவுநாளான மார்ச் 31-ம் தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்