வேட்பாளர்கள் உண்மைக்குப் புறம்பாக கணக்கு பராமரித்தல், தவறான பதிவுகள் போன்றவை கண்டறியப்பட்டால் விளக்கம் கேட்கும் அறிவிப்பு அனுப்பப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு, கணக்கு குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன்படி வேட்பாளர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கான ஆய்வு ஆண்டிபட்டி, போடி தொகுதிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 29-ம் தேதி மற்றும் ஏப்ரல் 3-ம் தேதி ஆகிய தினங்களில் நடைபெறும்.
இதே போல் பெரியகுளத்துக்கு சார் ஆட்சியர் அலுவலகம், கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 30-ம் தேதி மற்றும் ஏப்.4-ம் தேதி ஆகிய தினங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடக்க உள்ளது.
இதில் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர் (செலவினம்) கிலானிபாஷா, போடி, கம்பம் தொகுதிகளுக்கு மணாஸ் மண்டோல் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர். எனவே இந்நாட்களில் வேட்பாளர்கள் தங்களது செலவினப் பதிவேடு, ரசீதுகள், வவுச்சர்கள், வங்கி கணக்குப்பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பித்திட வேண்டும். இதில் உண்மைக்குப் புறம்பாக கணக்கு பராமரித்தல், தவறான பதிவுகள் போன்றவை கண்டறியப்பட்டால் விளக்கம் கேட்கும் அறிவிப்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு அனுப்பப்படும். அதன்பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago