தபால் வாக்குகள் வழங்குவதில் தாமதம் என புகார் :

By செய்திப்பிரிவு

பழநி, நிலக்கோட்டையில் தேர்தல் பயிற்சி வகுப்பு முடிந்தும் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்வதில் தாமதம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான 2-ம் கட்டப் பயிற்சி முகாம் திண்டுக்கல், பழநி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்களித்ததை உறுதிசெய்யும் கருவி ஆகியவற்றை எவ்வாறு கையாளுவது, வாக்குப்பதிவு நாள் அன்று படிவங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறவுள்ளது. ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்பை ஆட்சியர் மு.விஜயலட்சுமி பார்வையிட்டார்.

பழநியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள், அலுவலர்கள் சிலரை தபால் வாக்கு அளிப்பதில் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்யாமல் வெளியேறினர். தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்ததையடுத்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நிலக்கோட்டையில் தேர்தல் வகுப்பு முடிந்தும் தபால் வாக்கு வழங்குவதில் தாமதம் செய்வதாகவும் அரசு ஊழியர் கள், ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழந்தது.

இதையடுத்து அங்கு வந்த திமுக கூட்டணிக்கட்சி மக்கள் விடுதலைக்கட்சி வேட்பாளர் முருகவேல்ராஜன் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். விடுபட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டளிக்க வாய்ப்பளிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்