தேர்தல் நேரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசினார்.
கமுதியில் முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் எம்.முருகன், பரமக்குடியில் தேமுதிக வேட்பாளர் செல்வி ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அதிமுக, திமுக கட்சிகள் கூறி வருகின்றன. அந்த இரு கட்சிகளுக்கும் மாறி, மாறி ஊழல் புகார்களை சொல்வதற்கே நேரம் கிடைக்காதபோது மக்களுக்கு எவ்வாறு பணி செய்ய முடியும்.
ஆறு சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட பொய் பிரச்சாரத்தை அதிமுக கூறுகிறது. ஏற்கெனவே ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசு கடன் வைத்திருக்கும்போது சிலிண்டர் மற்றும் இலவசங்கள் எப்படிக் கொடுக்க முடியும். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்ற திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கை. தற்போதைய அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில் கமுதி அமமுக ஒன்றியச் செயலாளர்கள் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், கே.முத்து, தேமுதிக ஒன்றியச் செயலாளர் வேல்மயில் முருகன், மருதுசேனை நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago