திட்டக்குடி
கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியப் பகுதியாக இத்தொகுதி அமைந்துள்ளது. 1952-ல் விருத்தாசலம் தொகுதியிலிருந்து, பின்னர் 1957 மற்றும் 1962 பொதுத் தேர்தல்களில் நல்லூர் தொகுதியாகவும், 1967 முதல் 2006 வரை மங்களூர் (தனி) தொகுதியாக இருந்து வந்தது. 2011-ல் தொகுதி மறு சீரமைப்பின் காரணமாக திட்டக்குடி தொகுதியாக மாறியது.
தொகுதியின் பெயர் மாறியதே தவிர மற்றபடி மங்களூர் தொகுதியில் இடம்பெற்றிருந்த கிராமங்கள், ஒன்றியங்கள் அனைத்தும் திட்டக்குடி தொகுதியில் இடம்பெற்றுள்ளன. திட்டக்குடி, பெண்ணாடம் பேரூராட்சிகள், மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 66 ஊராட்சிகளும், நல்லுார் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்ட அருள்மிகு அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. ஒரு அரசுக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
பெண்ணாடத்தில் தனியார் சர்க்கரை ஆலையும், சிமெண்ட் ஆலைகளும் இயங்கி வருகிறது.
பெரும்பாலும் மானாவாரி விவசாயப் பகுதியாக இருக்கிறது. கீழ்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரியின் நீராதாரத்தைக் கொண்டு, கரும்பு, உளுந்து, மணிலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு போதுமான தண்ணீர் வரத்து இல்லாதாதல், அப்பகுதி மக்கள் மாற்று விவசாயத்துக்கு தள்ளப்பட்டு, பருத்தி மற்றும் சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
அரசு, தனியார் நிறுவனங்கள் ஏதுமில்லாததால், இப்பகுதி இளைஞர்கள் மட்டுமின்றி தம்பதியினரும் புலம் பெயர்ந்து அயல்நாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை நீடிக்கிறது.
நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாததால் கடும் வருத்தத்தில் உள்ளனர்.
வெலிங்டன் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். பாசன மற்றும் ஏரிகளை தூர் வாரி சீரமைக்க வேண்டும்.
கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் ஆலை தொடங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை மையம் தொடங்க வேண்டும்.
ஆவட்டி - கல்லூர் கூட்டுரோடு பகுதியில் மேம்பாலம், நிதிநத்தம், மேலூர், புலிவலம் கிராமங்கள் மழைக் காலங்களில் தீவாக மாறி துண்டிக்கப்படுவதைத் தடுக்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம், வேப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.
வெற்றி வரலாறு
2011-ம் ஆண்டு உருவான திட்டக்குடி தனி சட்டப்பேரவை தொகுதியில் முதன்முறையாக தேமுதிக வெற்றி பெற்றது. 2016-ல் திமுக வெற்றி பெற்றது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,04,899
பெண் - 1,08,908
திருநங்கைகள் - 3
மொத்த வாக்காளர்கள் - 2,13,810
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago