விருத்தாசலம்
பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் ஊருக்கு பெருமை சேர்க்கிறது. சென்னை - தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பு இங்குள்ளது.
விருத்தாசலம் வட்டத்தில் ஒரு பகுதி இத்தொகுதியில் உள்ளது. மங்களம்பேட்டை பேரூராட்சி, விருத்தாசலம் நகராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில்.
வெற்றி வரலாறு
1952 முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 15 தேர்தல்களில் பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். 4 முறை காங்கிரஸ், அதிமுக 3 முறை, திமுக,தேமுதிக தலா 2 முறையும், உழைப்பாளர் கட்சி, ஜனதா பார்ட்டி, பாமக மற்றும் சுயேச்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 2016- வரை தேமுதிகவிடமிருந்த இத்தொகுதியை, 2016-ம் அதிமுக கைப்பற்றியது.
மக்களின் எதிர்பார்ப்புகள்
அரசு சார்ந்த திட்டங்கள் ஒதுக்கீடு செய்வதில் போதிய கவனமின்மையால், சாலை வசதிகள் மிக மோசமாக உள்ளது.
மணிமுக்தா ஆறு ஒருபுறம் வறண்டு மணல் கொள்ளையர்களுக்கு கை கொடுத்து வருவது, ஆறு கழிவுநீர் கால்வாயாக மாறியிருப்பது தொகுதிவாசிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.
சிட்கோவால் உருவாக்கப்பட்ட பீங்கான் பொருள் உற்பத்திக் கூடங்கள் முடங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
விருத்தாசலம் ரயில் சந்திப்பு வழியாக தினந்தோறும் 40 ரயில்கள் வரை சென்று வருகின்றன. 3 கி.மீ தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தை ரயில் நிலையம் அருகில் மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை ஏட்டளவிலேயே உள்ளது.
2016-ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலின் போது, தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மறைந்த ஜெயலலிதா, விருத்தாசலத்தில் தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியபோது, முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவமும் இங்கு தான் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத் தலைநகர் உருவாக்கப்படும் எனக் கூறினார். அந்த வாக்குறுதி அப்படியே இருக்கிறது. அண்மையில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதும் விருத்தாசலம் கண்டு கொள்ளப்படவில்லை.
வாக்காளர்கள்
ஆண் - 1,21,981
பெண் - 1,22,373
திருநங்கைகள் - 19
மொத்த வாக்காளர்கள் - 2,44,373
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago