பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திரத்திருவிழா நாளை (மார்ச் 22) கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் தைப்பூச விழா, பங்குனி உத்திர திருவிழா ஆகியவை பிரசித்தி பெற்றவை. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பிற மாவட்ட மக்களும் விழாக்களில பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். தைப்பூச விழாவில் பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் வழிபடுவர். பங்குனி உத்திர விழாவில் தீர்த்தக் காவடி எடுத்துவந்து பக்தர்கள் வழிபடுவர்.
பங்குனி உத்திரவிழா தொடக்கமாக நாளை (மார்ச் 22) காலை 10.20 மணிக்கு பழநி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் ஆறாம் நாள் மார்ச் 27-ம் தேதி இரவு 7.15 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
தினமும் சுவாமி பல்வேறு வாகனங் களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க கிரிவீதிகளில் தேர் வலம்வர உள்ளது. மார்ச் 31-ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக பழநி பேருந்து நிலையம், கோயில் அலுவலகம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் அலுவலகத்தில் பக்தர்களின் அவசர உதவிக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 1800 425 9925, 04545-240293 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
பொது சுகாதாரத்துறை மூலம் பக்தர் களின் அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் நீராடும் இடும்பன் குளம், சண்முகநதியில் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவசியம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாத பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவர். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கட்டுப்பாடுகள்
ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டகப்படி நடத்துவதற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தீர்த்தக்காவடி எடுத்துவரும் பக்தர்கள் குழுவாக வராமல் குறைந்த அளவில் காவடி எடுத்துவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழநி பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகள் குறித்து பழநி சார் ஆட்சியர் ஆனந்தி மலையடிவாரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினார். பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், வட்டாட்சியர் வடிவேல்முருகன், டி.எஸ்.பி.சிவா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago