ஆப்பனூரில் களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம் :

By செய்திப்பிரிவு

கடலாடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

கடலாடி அருகே ஆப்பனூரில் அரியநாயகி அம்மன் கோயில் மாசா திருவிழாவை முன்னிட்டு 3பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு பிரிவில் 24 வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் முதல் சுற்றில் 30 வண்டிகளும், 2-ம் சுற்றில் 30 வண்டிகளும் கலந்து கொண்டன.

ஆப்பனூர் முதல் இளஞ்செம்பூர் விலக்கு ரோடு வரை சுமார் 12 கி.மீ. தூரம் வண்டிகள் சென்று திரும்பின. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரபேரி எஸ்டியதளியின் மாடுகள் முதலிடம், தூத்துக்குடி கடம்பூர் கருணாகரராஜாவின் மாடுகள் 2-ம் இடம், தூத்துக்குடி சண்முககுமாரபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மாடுகள் 3-ம் இடத்தையும் பிடித்தன.

சிறிய மாடு முதல் சுற்று பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் தாளாகுளம் ஊராட்சித் தலைவர் மாடுகள் முதலிடத்தையும், மதுரை மாவட்டம், ஆனையூர் செல்வம் மாடுகள் 2-ம் இடத்தையும், கடம்பூர் கருணாகரராஜா மாடுகள் 3-ம் இடத்தையும் பிடித்தன. மூன்றாம் சுற்று பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம் பூதலபுரம் மணிராஜ் என்பவரின் மாடுகள் முதலிடத்தையும், மருங்கூர் மாடுகள் 2-ம் இடத்தையும், புதூர் பாண்டியபுரம் மாடுகள் 3-ம் இடத்தையும் பிடித்தன.

வெற்றிபெற்ற மாடுகளின் உரிமை யாளர்கள் மற்றும் வண்டிகளை ஓட்டியவர்களுக்கு பணம், குத்துவிளக்கு, வெண்கலப் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாட்டு வண்டிப் போட்டிகளை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்