கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்வோம் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிட அதிமுகவில் பலர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளரும், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநர் செந்தில்குமார் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வேட்பாளரை மாற்றி அறிவிக்கக் கோரி அழகுவேல்பாபு ஆதரவாளர்கள் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை, திருவண்ணாமலை, சேலம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வேட்பாளரை மாற்றா விட்டால் கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார். ஆனால் கள்ளக்குறிச்சி நகரசெயலாளர் பாபு மற்றும் கட்சித் தொண்டர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்ளிட்ட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனிடையே கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் போது அதிமுக நகர செயலாளர் பாபுவை கைது செய்ய டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் முயன்றனர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஊர்வலமாக சென்ற போது நகர செயலாளர் பாபுவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனிருந்த நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago