வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின்இளையமகன் ஜெயபிரதீப் போட்டிடுவதாக தகவல் பரவியது. இதே போல் டிடிவி.தினகரனும் தேனியில் போட்டியிட உள்ளார் என்ற செய்தியால் பரபரப்பு கூடியது. தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியானதால் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் என்று 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேனி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது. காரணம் துணை முதல்வர் தொகுதி இங்கிருப்பதுதான். மேலும் எதிரணியில் அவருக்கு இணையாக களத்தில் இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச் செல்வனின் பிரசார நகர்வும் பிரதானமாக பேசப்பட்டு வந்தது.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பலரும் தங்கள் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டினர். இதற்காக கட்சித் தலைமையை அணுகுதல், விருப்பமனு தாக்கல் செய்தல், தங்களது கட்சிச் செயல்பாடுகள், போராடிய விவரம் போன்றவற்றை தொகுப்பாக ஒருங்கிணைத்து சென்னையிலேயே அதிக நாள் முகாமிடுதல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினர். பலர் நேர்காணலிலும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களது ஆதரவாளர்கள் இவர்தான் போட்டியிடுகிறார். இல்லை அவர்தான் போட்டியிடுகிறார் என்று ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டி தகவல்களை பரவ விட்டனர். ஒவ்வொரு கட்சியிலுமே நான்கைந்து பேருடைய பெயர்கள் இது போன்ற சுழன்று கொண்டே இருந்தது. இந்நிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அரசியலில் இறங்க உள்ளார். இதற்காக மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்ற தகவலும் பரவியது. அது போடி தொகுதியிலா, கம்பம் தொகுதியிலா என்று பல வாரங்களாக பேசப்பட்டு வந்தது. இதன் உட்பிரிவாக இம்முறை ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடவில்லை. கவர்னர் பதவிக்கான முயற்சிகள் அவருக்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவே போடியில் ஜெயபிரதீப் போட்டியிடுவார் என்ற தகவல்களும் உலா வந்தன. இது உண்மைதான் என்பது போன்ற அரசியல் நிலை அப்போது இருந்தது. ஜெயபிரதீப்பிற்காக விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் தான் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்றார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் தொகுதிகளின் பழைய முடிவுகள், பெற்ற வாக்குகளை எல்லாம் முன்வைத்து கணக்கீடுகளால் களமாடினர். எந்த தொகுதி சாதகம், எந்த தொகுதியில் சமுதாய ஓட்டுக்கள் அதிகம், எதில் போட்டியிட்டால் வாய்ப்பு அதிகம், அந்த தொகுதியில் வேட்பாளர் விருப்ப நிர்வாகி அதிருப்தி அடைய வாய்ப்புள்ளதா என்ற விண்தொடு வாதங்களால் நாட்கள் நகர்ந்தன. இதுபோதாதென்று இதர கட்சிகளும் தகவல் பரப்பலில் தங்களை இணைத்துக் கொண்டன. இதனால் தேனி மாவட்ட அரசியல் களத்தில் வெவ்வேறு கருத்துக்களால் பிரச்சாரத்திற்கு முன்பே அனல் பறந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் உண்மை போன்றே உலா வந்த பல புனைவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago