மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
சூரியனும், சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும். முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும், நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தை பூர்த்தி செய்ய இந்துக்கள் தை, மாசி, ஆடி, மற்றும் மஹாளய அமாவாசைகளில் நீர் நிலைகளில் நிறைவேற்றுவார்கள்.
ராமேசுவரத்தில் அமாவாசை தினத் தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல் லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவர்.
ராமநாதசுவாமி கோயி லில் மாசி திருவிழா கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 15 வரை 12 நாட்கள் நடைபெறும் விழாவின் பத்தாம் நாளான மாசி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பகல் 1 மணியளவில் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் எழுந்தருளினர். பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணியளவில் அக்னி தீர்த்த மண்டபத்தில் ஒளி வழிபாடு முடிந்து சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago