ராமநாதபுரத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற பணம் ஒப்படைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் கைப்பற்றும் பணத்தை உரிய ஆவணங்களைக் காட்டி திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார் தலைமையில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சரவணன் மற்றும் மாவட்டக் கருவூல அலுவலர் ஆகியோர் கொண்ட பணம் ஒப்படைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டவர் உரிய ஆவணத்துடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் பணம் ஒப்படைக்கும் குழுவினர் கூடி விண்ணப்பத்தை பரிசீலனை செய்தும், உரியவரிடம் விசாரணை செய்தும் பணத்தை ஒப்படைக்க அந்தந்த தேர்தல் அலுவலருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்குவர். அதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உரியவரிடம் பணத்தை ஒப்படைப்பார். விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் விண்ணப்பித்தவருக்கு பணம் கிடைக்கும் எனத் தேர்தல் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
திரும்பி ஒப்படைப்பு
மாவட்டத்தில் இதுவரை 12 பேர் பணத்தை திருப்பிக்கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் குழு பரிசீலனை செய்து ராமநாதபுரம் தொகுதியில் மீன் வியாபாரி மற்றும் கோழி வியாபாரியிடம் ரூ. 1,00,000-மும், பரமக்குடி தொகுதியில் கதிர் அடிக்கும் இயந்திரத்துக்கு உதிரி பாகங்கள் வாங்கச் சென்றவரிடம் இருந்து கைப்பற்றிய ரூ. 65,000-மும் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago